திரைப்பார்வை: இன்னல வர (மலையாளம்) பழைய வழக்கில் புதிய கதை

By ஜெய்குமார்


மலையாளத்தின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் இணையான போபி - சஞ்சய் எழுத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது ‘இன்னல வர’. இயக்கம், ஜிஸ் ஜோய். ஆசிஃப் அலி, அங்கமாலி புகழ் ஆண்டனி வர்கீஸ், நிமிசா சஜயன் எனக் கேரளத்தின் திறன் கொண்ட நடிகர்களின் பங்களிப்பும் இந்தப் படத்துக்கு உண்டு.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்வதைப் பின்னணியாகக் கொண்ட படங்கள் சமீப காலமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. அதையே கையில் எடுத்திருக்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். அதை வலியோருக்கும்- எளியோருக்கும் நடக்கும் போராட்டம் என்ற சினிமாவுக்குப் பழக்கப்பட்ட ஒரு வழக்குக்குள் கொண்டு வந்து பொருத்தியிருக்கிறார்கள்.

ஒழுங்கில்லாத வாழ்க்கை முறையில் இருக்கும் ஆசிஃப் அலி இதில் ஒரு சினிமா நாயகனாக நடித்திருக்கிறார். சொந்தப் படம் எடுத்துக் காசை இழக்கிறார். பணம் தேவை என்றாலும் அவருக்குத் தன்முனைப்பை விடாத சுபாவம். கழிவறைத் துடைப்பான் விளம்பரத்தில் நடிக்க மறுக்கிறார். உறவுகளைக் கையாள முடியாமல் திணறுகிறார்.

இன்னொரு பக்கம் தகவல் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞனாக ஆண்டனி , ஐடியில் வேலை பார்க்கும் நிமிசா காண்பிக்கப்படுகிறார்கள். இந்த இரு முனைகளுக்குமான போராட்டம்தான் படம் என பார்வையாளர்களால் யூகிக்க முடிகிறது. எல்லாப் படங்களையும் போல் இந்தப் போராட்டத்துக்குப் பின் நியாயமான காரணம் சொல்லப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் யார் வெல்ல வேண்டும் எனப் பார்வையாளர்கள் தீர்மானிப்பதற்காகச் சில காட்சிகளை வைத்திருக்கிறார். அதைத் தடுக்கும் விதமான காட்சிகளைக் கோத்த்து சுவாரசியம் அளிக்க முயன்றிருக்கிறார்கள்.

இது தொழில்நுட்பத்தை அடிப்படையிலான படம் அல்லவா? அதனால் இடையிடையே அதையும் காண்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப் போகிறது படம். இயக்குநர் ஜிஸ் ஜோய், ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்துக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம். இயக்குநராக கதாபாத்திரஙகளை நிறைவாகப் படைத்திருக்கிறார். ஆசிஃப், நிமிசா போன்ற திறமையான நடிகர்கள், இருந்தும் படம், திரைக்கதை பலவீனத்தால் சுவாரசியம் அளிக்காமல் போகிறது.

‘காணக் காண’, ‘மும்பை போலீஸ்’ போன்ற சிறந்த திரைக்கதைகளை உருவாக்கியவர்கள் போபி-சஞ்சய். இவர்கள் சில சுமாரான படங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இதுவும் ஒன்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE