முதல் பார்வை | 777 சார்லி - நெகிழவைக்கும் அன்பை கடத்துவதில் தடுமாறிய படைப்பு

By கலிலுல்லா

பிரியமான உயிரொன்றின் விருப்பமான ஆசையை தடைகள் பல கடந்து நிறைவேற்றத்துடிக்கும் நெகிழ்ச்சியான படைப்பு தான் '777 சார்லி'.

ஒரு பெரும் இழப்புக்குப்பின் தனியாகவே இப்பெரும் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார் தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி). சிரிப்புக்கான தடயமேயில்லாத தர்மாவின் முகத்தில் எப்போதும் கோபமும், வெறுப்பும் சூழ்ந்துகொண்டிருக்கிறது. வாழ்வில் எந்த பிடிமானமில்லாமல் இருக்கும் தர்மாவிடம் வந்து தஞ்சமடைகிறது சார்லி என்ற நாய். வேறு வழியில்லாமல் அதை விற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வளர்த்துக்கொண்டிருக்கும் தர்மா ஒரு கட்டத்தில் சார்லியில்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.

தர்மாவின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றும் சார்லிக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்ன ஆசை? அதை தர்மா எப்படி நிறைவேற்றினார்? இறுதியில் என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு எமோஷனலாக பதில் சொல்லிருக்கும் படம் தான் '777 சார்லி'. கன்னட படமான இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஜ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி. கோபத்தையும், வெறுப்பையும், தனிமையையும், சோகத்தையும் முதல் பகுதியிலும், அன்பையும், நெகிழ்ச்சியையும், அழுகையையும், பிரிவின் துயரையும் இரண்டாம் பகுதியிலும் காட்ட வேண்டிய கதாபாத்திரம் அது. இந்த இரண்டு பகுதிகளையும் நேர்த்தியாக கையாண்டி துறுத்தல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்திய விதத்தில் கவனம் பெறுகிறார் ரக்‌ஷித் ஷெட்டி. பெரும் உழைப்பை படத்துக்காக கொட்டியிருக்கிறார். அவருக்கு இணையான எக்ஸ்பிரஷன்ஸ்களை வெளிப்படுத்தியிருக்கிறது சார்லியாக நடித்திருக்கும் நாய். உண்மையில், அதன் சோகமான முக பாவனைகளை நம்மை உருக்கிவிடுகிறது.

குறிப்பாக ரக்‌ஷித் ஷெட்டிக்கு நன்றி தெரிவிக்கும் இறுதிக்காட்சியில் நம்மை கலங்க வைத்துவிடுகிறது. நாய்க்கு சிறப்பான பயிற்சி அளித்து, படத்துக்கு தேவையானதை சமரசமின்றி வாங்கியிருக்கிறார் இயக்குநர் கிரண்ராஜ். தேவிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கீதா, நடிப்பில் குறைவைக்கவில்லை என்றாலும், அவரால் படத்தில் குறை நிகழ்த்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை நீக்கியிருந்தால் படத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. சொல்லப்போனால் இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும். வலிந்து திணித்தது கதையோட்டத்தை சீர்குலைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்கினாலும், தயாரித்தாலும், ஏன் வெளியீட்டாலும் கூட பாபி சிம்ஹாவை எப்படியாவது நடிக்க வைத்துவிடுகிறார். ஒரு சில காட்சிகள் வந்தாலும் கவனம் பெறுகிறார் பாபி சிம்ஹா. கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'கருட கமனா விருஷப வாகன' படத்தின் இயக்குநராகவும், ரவுடியாகவும் மிரட்டிய ராஜ் பி. ஷெட்டி இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் பொருந்திபோகிறார்.

மனிதனுக்கும் நாயுக்குமான உணர்வுகளை பிணைத்து திரைக்கதை ஆக்கம் பெற்றிருக்கிறது. முதல் பாதி முழுவதும் எந்தவித தடங்கலும் இல்லாமல் நீரோட்டம் போல பாய்கிறது. பொதுவாகவே இதுபோன்ற கதைக்களங்களில், நாயகன் எப்படியும் நாயை எடுத்து வளர்கப்போகிறான் என்பதும், அதனுடன் அன்பு பாராட்டுவதும் யூகிக்ககூடியதே. அப்படியான கதையில் சுவாரஸ்யமான உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் இயக்குநர். காமெடி, எமோஷனல், சோகம் என முதல் பாதியே ஒரு முழுமையான பேக்கேஜாக இருந்தது. ஆனால், அதே நம்பிக்கையில் இரண்டாம் பாதியைக் காண காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். நாயகியின் தேவையற்ற இணைப்பு, தேவைற்ற பாடல்கள், ஆகியவை படத்தின் திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது.

தவிர, படத்தில் நம்மை கலங்க வைக்கும் நிறைய காட்சிகள் அழகாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. நாயகனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்போது, 'சொந்தக்காரங்க யாரும் வரலையா?' என கேட்கும்போது, 'பின்னாடி வராங்க' என்ற வாய்ஸ் ஓவரின்போது, நாய் துரத்தி வரும் காட்சி, நாய்களுக்கான போட்டி, இறுதிக்காட்சி என நெகிழவைத்துவிடுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பின்னணி இசை. இத்தனை உணர்வுப்பூர்வமான கதைக்கு, பொருந்தாத பின்னணி இசையால், தேவையான உணர்வை கடத்த முடியவில்லை. துண்டு துண்டாக வரும் ஏராளாமான பாடல்களும், அதன் இசையும் காட்சிக்கு சற்றும் பொருந்தவில்லை. இசையமைப்பாளர் நோபின் பால் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாரா க்ளைடிங், சார்லிக்கான மான்டேஜ் காட்சிகள் என அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது.

தொடக்கத்தில் நாயகனின் வழக்கமான வாழ்க்கை முறையை காட்ட உதவும் பிரதீக் ஷெட்டி கட் கச்சிதம். ஆனால், இன்னும் மனது வைத்து இரண்டாம் பாதியில் பெருமளவு காட்சிகளை குறைத்திருந்தால் கண்டிப்பாக பாராட்டியிருக்கலாம். 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய படத்தை 2.45 நிமிடம் இழுத்திருப்பது படத்துக்கு மைனஸ். நாய்களுக்கான இனப்பெருக்க முறையில் நிகழும் முறைகேடுகள், இன்பிரிடீங் எனப்படும் மோசமான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் படம் பதிவு செய்கிறது.

மொத்தமாக நெகிழ வைக்கும் உருக்கமான அன்பை கடத்தும் முயற்சியில் முதல் பாதிவரை வெற்றி பெற்று, இரண்டாம் பாதியில் தடுமாறியிருக்கும் படைப்பு. இருப்பினும் திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பவர்களை சார்லி ஏமாற்றாதது என்பது உறுதி.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக்காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்