“தமிழுக்காக ‘வீட்ல விஷேசம்’ திரைக்கதையை மாற்றியுள்ளோம்” - ஆர்ஜே பாலாஜி

By செய்திப்பிரிவு

'பதாய் ஹோ' படத்தின் ரீமேக் ஆன 'வீட்ல விஷேசம்' படத்தின் திரைக்கதையை தமிழுக்காக மாற்றியமைத்துள்ளதாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்.ஜே பாலாஜி கடந்த 2019-ம் ஆண்டு 'எல்.கே.ஜி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்த நிலையில், தற்போது மூன்றாவதாக 'வீட்ல விசேஷம்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் வெளியான 'பதாய் ஹோ' படம் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. காமெடி கதைக்கொண்ட இப்படத்தில் ஆயூஷ்மான் குரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்து பாராட்டுகளை குவித்தனர். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் பெற்றிருந்தார். அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் நடித்துள்ள இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் கதையை தமிழுக்காக மாற்றியுள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''முதல் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது, அம்மா தாய்மை அடைவதுதான் கதை. இதேபோன்ற கதை கொண்ட படம் இந்தியில் வெளியானது தெரிந்தது. அதை ரீமேக் செய்கிறீர்களா என்று தயாரிப்பாளர் போனி கபூர் கேட்டபோது மறுக்க முடியவில்லை. தமிழுக்காக திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளோம்'' என்றார் ஆர்ஜே பாலாஜி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE