‘விக்ரம்’ வசூல் சாதனை: 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி; உலக அளவில் ரூ.150 கோடி

By செய்திப்பிரிவு

கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் வெளியான 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நேற்று ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், தமிழக அரசு சார்பில் படம் வெளியான நாளிலிருந்து 3 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 'விக்ரம்' படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்தது; உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2022-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படத்தில் 'விக்ரம்' அதிக வசூலை குவித்த படமாக உருவெடுக்கும் என வர்த்தக ஆலோசகர்கள் பலர் தெரிவித்துவருகின்றனர். காரணம், விடுமுறை நாட்கள் கடந்து, வேளை நாளான இன்றும் கூட திரையரங்குகள் நிரம்பிக் கிடக்கின்றன. பலர் டிக்கெட்டுகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் படம் வெளியான 3 நாட்களில் ரூ.60 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கேரளாவில் 3 நாட்களில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இதுவரை எந்த தமிழ் சினிமாவில் படைக்காத சாதனையை விக்ரம் படைத்துள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் 3 கோடியையும், கர்நாடாகவில் 3 கோடியையும் படம் வசூலித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE