முதல் பார்வை | சாம்ராட் பிருத்விராஜ் - சொதப்பலான திரைக்கதையால் சோதிக்கும் படைப்பு

By கலிலுல்லா

12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிருத்விராஜ் மன்னனுடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவுதான் இந்த 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம்.

தனது வீரம் மற்றும் நிர்வாக திறமையினால், டெல்லியை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் பிருத்விராஜ் சௌஹான். அதே நேரம் கஜினி ராஜாவாக இருக்கும் முகமது கோரி, டெல்லியை கைப்பற்ற நினைக்கிறார். இதனிடையே கன்னூஜின் ராஜாவான ஜெய்சந்தின் மகள் சம்யுக்தாவுக்கும், பிருத்விராஜ் சௌஹானுக்கும் காதல் மலர்கிறது.

தந்தை ஜெய்சந்தின் தடையை மீறி மகள் சம்யுக்தா, பிருத்விராஜ் சௌஹானுடன் திருமணம் முடிக்கிறார். இதைத்தொடர்ந்து பிருத்விராஜை பழிவாங்க, முகமது கோரியுடன் கைகோக்கும் ஜெய்சந்த்தின் வியூகம் இறுதியில் என்ன ஆனது? இந்த சதி வலையிலிருந்து பிருத்விராஜ் வீழ்ந்தாரா? மீண்டாரா? என்ன ஆனார்? - இதுதான் படத்தின் திரைக்கதை.

மன்னர் பிருத்விராஜ் சௌஹானாக அக்‌ஷய் குமார். அவரைச் சுற்றியே நடக்கும் கதை என்பதால், தனது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நடிப்பில் பிரச்னையில்லை. மாறாக, அரசனுக்கான கம்பீரத்தை அக்‌ஷய் குமாரால் கொண்டு வரமுடியவில்லை என்பது திரையில் தெரிகிறது. 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லர் குறைசொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசவைக் கவிஞர் மற்றும் ஜோதிடர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் சோனு சூட். அவருக்கு பிரதான வேலையே அரசர் பிருத்விராஜ் சௌஹானை புகழ்வது தான். படத்தின் தொடக்க காட்சியில் மைதானத்தில் அக்‌ஷய் குமார் சிங்கத்துடன் சண்டையிடும்போது, தூரமாக நின்று ரன்னிங் கமென்ட்ரி கொடுப்பது, கிடைக்கும் கேப்பில் மன்னரை புகழ்வது, அவ்வப்போது கண்களை மூடி எதிர்காலத்தை கணிப்பது என குடுமியை வைத்துக்கொண்டு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இவர்களுடன் சேர்ந்திருக்கிறார் சஞ்சய் தத். இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்து யாராவது 'போர்' என்ற வார்த்தையை சொல்லிவிட்டால் போதும், 'இதோ வருகிறேன்' என எப்போதும் செட் பிராபர்டியாக வைத்திருக்கும் வாளை தூக்கிகொண்டு, 'வீரம்' னா என்னான்னு தெரியுமா என வசனம் பேசுகிறார். கண்களை துணியால் முடிக்கொண்டிருக்கும் அவர் அதற்கு சொல்லும் காரணம் சோதிக்கிறது.

விறுவிறுப்புடன் தொடங்கும் படத்தின் முதல் காட்சி பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால், அதேபோன்ற சுவாரஸ்யமான காட்சிகளை அடுக்கத் தவறியது படத்தின் பெரிய பலவீனம். படத்தின் ஆங்காங்கே பில்டப் பாட்டுகள், கஜினி கோரியின் சகோதரர் மீர் உசைன் விவேகம் படத்தில் அஜித்தை புகழும் விவேக் ஓப்ராயைப்போல, அக்‌ஷய் குமாரை புகழ்ந்துகொண்டிருக்கிறார்.

படத்தில் வரும் போர்களக் காட்சிகள் தொடக்கத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், கோரி மன்னருடன் சண்டையிட்டு அவரை அக்‌ஷய் குமார் வீழ்த்தும் விதம், நேரமாகிவிட்டதால் சீக்கீரமாக படப்பிடிப்பை முடித்து பேக் அப் செய்ய வேண்டும் என்பதற்காக முடிக்கப்பட்டது போல் இருக்கிறது. அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அண்மையில் வந்த வரலாற்று படமான 'பத்மாவத்' படத்தில் அலாவூதின் கில்ஜி கதாபாத்திர வடிவமைப்பு வேகம், உற்சாகம் குறையாமல் மன்னருக்கான அம்சங்களுடன் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இதில் எதிரி மன்னராக காட்டப்படும் முகமது கோரியிடம் மன்னருக்கான அடையாளங்கள் தேடினாலும் சிக்கவில்லை.

படம் முழுக்க பாலின சமத்துவம் பேசப்படுகிறது. பெண்களும் அரசவை, நீதிமன்ற வழக்குகள் நடத்த வேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டு இறுதியில் நாயகியுடன் சேர்ந்து அரண்மனை பெண்கள் அனைவரும் சதி உடன் கட்டை ஏறுவது மிகப்பெரிய முரண்.

தவிர, 'கோயில்களை அவர்கள் மசூதிகளாக மாற்றினார்கள்' என்பது வலிந்து திணித்தப்பட்ட வசனமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பிருத்விராஜ் அரசவையில் போருக்கு முன் மத முழக்கங்கள் எழுப்பபடுகிறது. ஆனால், முகமது கோரி முகாமில் அப்படியான எந்த மதப் போர் முழக்கங்களும் இல்லை.

தவிர, இந்திய மன்னர்கள் பிரிந்து கிடந்ததுதான் தோல்விக்கு காரணம் என்பதையும் படம் பதிவு செய்கிறது. ஆபரணங்கள், போர்க் காட்சிகள் தவிர, வரலாற்று படத்துக்கான எந்த ஒரு தடயமும் படத்தில் இல்லை. படத்தின் இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதியின் வரலாற்று தரவுகளை திரட்டி எடுத்தற்கான எந்தவொரு மெனக்கெடலும் திரையில் தோன்றவில்லை.

அதேபோல மிகவும் சுமாரான திரைக்கதையால் எந்தக் காட்சியும் மனதில் பதியாமல் நீர்க்குமிழ்களைப்போல சட்டென்று தோன்றி மறைந்துவிடுகிறது. மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு பலம் சேர்த்தாலும், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் சேர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தை உருவாக்க 4 ஆண்டுகள் தேவைப்பட்டதாக பேட்டி ஒன்றில் அக்‌ஷய் குமார் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான நியாயத்தை படம் சேர்க்கவில்லை.

மொத்ததில் சாம்ராட் பிருத்விராஜ் படம் வரலாற்றில் இப்படியொரு மன்னர் இருந்தார் என்பதை மட்டுமே அறிய உதவும் மேம்போக்கான பலவீனப் படைப்பு.

வீடியோ விமர்சனத்தை காண :

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE