இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான மணி ரத்னம் திரைப்படத் துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவருடைய தந்தை கோபால் ரத்னம் திரைப்பட விநியோகஸ்தராகவும் உறவினர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளராகவும் இருந்தவர்கள். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரனும் தயாரிப்பாளர்.
எம்.பி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார் மணி ரத்னம். இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிஷங்கர், இயக்குநர் ‘வீணை’ எஸ்.பாலசந்தரின் மகன் ராமன் ஆகிய நண்பர்களுடன் இணைந்து திரைப்படம் உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார். கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’, பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ , மகேந்திரனின் ‘உதிரிப் பூக்கள்’ ஆகிய கிளாஸிக் திரைப்படங்கள் மணி ரத்னம் என்னும் திரைப்படைப்பாளிக்கு உந்துதல் அளித்தன.
அனில் கபூர், லட்சுமி நடிப்பில் ‘பல்லவி அனு பல்லவி’ என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமலேயே இயக்குநரானார் மணி ரத்னம். இந்தப் படத்துக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். இளையராஜா இசையமைத்தார். இளைஞன் ஒருவனுக்கும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான பெண்ணுக்கும் இடையில் முகிழும் நேசத்தை மையமாகக் கொண்டது இந்தப் படம். முதல் படத்துக்கே சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை வென்றார் மணி ரத்னம்.
மோகன்லாலை நாயகனாக வைத்து மணி ரத்னம் இயக்கிய மலையாளப் படம் ‘உணரு’ பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. ‘பகல் நிலவு’, ‘இதயக் கோவில்’ எனத் தமிழில் அவர் இயக்கிய முதல் இரண்டு படங்கள் இளையராஜாவின் பாடல்களுக்காக மட்டுமே நினைவுகூரப்படுகின்றன.
மணி ரத்னம் மீது தமிழர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் ‘மெளன ராகம்’. உயிரிழந்துவிட்ட காதலனை மறக்க முடியாமல் கட்டாயத்தின் பேரில் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் கதை இது. அந்தப் பெண் முதலில் கணவனை வெறுத்து ஒதுக்குகிறார். பின்பு அவனது எதிர்பார்ப்புகளற்ற அன்பினால் ஈர்க்கப்பட்டு திருமண உறவில் தொடர்வது போல் படத்தை முடித்திருப்பார் மணி ரத்னம். அந்த ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது ‘மெளன ராகம்’.
மணி ரத்னத்துக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்த படம் ‘நாயகன்’. நடிகர் கமல் ஹாசனின் திரைவாழ்விலும் மிக முக்கியமான படங்களில் ஒன்று. ‘தி காட்ஃபாதர்’ ஆங்கிலப் படத்தைத் தழுவியும் மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை அடியொற்றியும் எடுக்கப்பட்ட ‘நாயக’னுக்குத் தமிழ் சினிமாவின் காலத்தால் அழிக்க முடியாத கிளாஸிக் திரைப்படங்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. சிறந்த நடிகர் (கமல் ஹாசன்), சிறந்த ஒளிப்பதிவு (பி.சி.ராம்), சிறந்த கலை இயக்கம் (தோட்டா தரணி) ஆகிய மூன்று தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது.
‘அக்னி நட்சத்திரம்’ மிகப் பெரிய வணிக வெற்றிபெற்றதோடு இரட்டை நாயகர்களை வைத்து எடுக்கப்படும் கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. நாகார்ஜுனாவை நாயகனாகக் கொண்டு ‘கீதாஞ்சலி’ என்னும் தெலுங்குப் படத்தை இயக்கினார். இந்தப் படம் ஓர் அழகான காதல் கதையாக இளைஞர்களைக் கவர்ந்தது. மாற்றுத் திறனாளி குழந்தையையும் அதன் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களையும் முன்வைத்து எடுக்கப்பட்ட ‘அஞ்சலி’ விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது.
ரஜினிகாந்தின் திரைவாழ்வில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது மணி ரத்னம் இயக்கிய ‘தளபதி’. ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பொருத்தமான காட்சிகளோடு அவருடைய நடிப்புத் திறமையைச் சிறப்பாக வெளிக்கொண்டுவந்த தருணங்களும் ‘தளபதி’யில் நிறைந்திருந்தன. மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் நட்பின் மகத்துவத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது. ரஜினியின் உயிர் நண்பனாக நடித்திருந்த மம்முட்டியின் திரைவாழ்விலும் முக்கியமான படமாக அமைந்தது ‘தளபதி’.
‘ரோஜா’ மூலம் மணி ரத்னம் தேசிய அளவில் புகழ்பெற்றார். சத்தியவான் சாவித்ரி புராணக் கதையின் சாரத்தை எடுத்துக்கொண்டு அதில் காஷ்மீர் பிரச்சினையை இணைத்து அழகான காதல் தருணங்களும் இந்திய தேசப்பற்றைப் பறைசாற்றும் செண்டிமெண்ட் காட்சிகளும் நிறைந்த திரைப்படமான ‘ரோஜா’ தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வென்ற உலகச் சாதனையாளராகவும் இன்றளவும் நட்சத்திர இசையமைப்பாளராகவும் வலம்வருகிறார்.
‘ரோஜா’வுக்கு அடுத்து மணி ரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்கான தேசிய விருதை வென்றது. ‘பம்பாய்’ பாபர் மசூதி இடிப்பை அடுத்து மும்பை உள்ளிட்ட நகரங்களில் வெடித்த மதக் கலவரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டது. மதம் கடந்த மனித நேயத்தை வலியுறுத்திய இந்தப் படமும் தமிழிலும் இந்தியிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்-கருணாநிதியின் நட்பையும் அதற்குப் பிறகான அரசியல் பகையையும் அடியொற்றிப் பெரிதும் புனைவு கலந்து மணி ரத்னம் இயக்கிய திரைப்படம் ‘இருவர்’. படம் வணிகரீதியாகப் படுதோல்வி அடைந்தது. ஆனால், ஆண்டுகள் கடந்த பின் ‘இருவர்’ படத்துக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தைத் திரையில் மீளூருவாக்கம் செய்ததற்காகவும் ஒரு கிளாஸிக் சினிமாவுக்குத் தேவையான வலுவான நாடகத் தருணங்களுக்காகவும் இந்தப் படம் சமகால ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்படுகிறது.
புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டில் வெளியான ‘அலைபாயுதே’ மணி ரத்னம் காலமாற்றத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் படைப்பாளி என்பதை நிரூபித்தது. இந்தப் படம், இளமை துள்ளும் காதல் தருணங்கள் நிரம்பியது. காதல் திருமணத்துக்குப் பிறகு உறவில் ஏற்படும் விரிசல்களையும் அவற்றைக் கடந்து ஆழமான காதலால் அந்த உறவு நிலைப்பதையும் இப்படம் முதிர்ச்சியுடன் காட்சிப்படுத்தியது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பின்னணியில் தன்னை ஈன்றெடுத்த தாயைத் தேடிச் செல்லும் சிறுமியின் கதையைச் சொன்ன ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆறு தேசிய விருதுகளையும் தமிழ்நாடு அரசின் ஏழு விருதுகளையும் வென்றது.
இதற்கு அடுத்து மணி ரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ கல்வி கற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் (living together) இன்றைய காலகட்டக் கலாச்சாரத்தை முன்வைத்து மணி ரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ வணிக வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் மணி ரத்னத்தின் சிந்தனை இளமையாகவே இருப்பதை உணர முடியும். ‘செக்கச் சிவந்த வான’த்தின் வெற்றி இந்தக் காலகட்டத்துக்கேற்ற மல்டி ஸ்டாரர் திரைப்படங்களுக்கான முன்மாதிரியாக அமைந்தது. இவற்றுக்கு முன்னும் பின்னும் அவர் இயக்கிய ‘ராவணன்’, ‘கடல்’, ‘காற்றுவெளியிடை’ ஆகிய படங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றன.
‘தில் சே’, ‘யுவா’, ‘குரு’, ‘ராவண்’ என நான்கு நேரடி இந்திப் படங்களை இயக்கியிருக்கிறார் மணி ரத்னம். இவற்றில் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘குரு’ மட்டுமே வணிகரீதியாக வெற்றிபெற்றது. ‘யுவா’ (‘ஆய்த எழுத்து’), ‘ராவண்’ (‘ராவணன்’) ஆகியவை ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்ட படங்கள். ‘சாத்தியா’ (அலைபாயுதே), ‘ஓகே ஜானு’ (ஓகே கண்மணி) வேறு இயக்குநர்களால் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்பட்ட மணிரத்னம் படங்கள்.
மணி ரத்னம் இயக்கத்தில் உள்ளடக்கம் சார்ந்து சோடைபோன திரைப்படங்களில்கூட உருவாக்கம் உயர்தரத்தில் இருக்கும். தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த திரைமொழி, நேர்த்தியான உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் தனக்கென்று ஒரு ராஜபாட்டையை வகுத்துக்கொண்டவர் மணி ரத்னம். திரைமொழி உள்ளிட்ட உருவாக்கம் சார்ந்த விஷயங்கள் மீதான ரசனையையும் மேம்படுத்தியவர்.
40 ஆண்டுகளை நெருங்கும் திரைவாழ்வில் தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள் உள்பட மணி ரத்னம் வென்ற திரைப்பட விருதுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவருடைய படங்களின் மூலம் பல நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளனர். இது தவிர ஏ.ஆர்.ரகுமான், ஐஸ்வர்யா ராய் என உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளையும் அரவிந்த் சுவாமி, மாதவன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் மணி ரத்னம்.
மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அழகம் பெருமாள், சுசி கணேசன், சுதா கொங்கரா, ஆர்.கண்ணன், பிரியா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியிருக்கிறார்கள். அத்துடன் அவருடைய திரைப்படங்களைப் பார்த்து சினிமா கற்றுக்கொண்ட இயக்குநர்கள் பலர். மிஸ்கின், வெற்றிமாறன், கெளதம் மேனன் என இன்றைய தலைமுறையின் சிறந்த இயக்குநர்கள் பலர் மணி ரத்னத்தைப் பெரிதும் மதிக்கிறார்கள். அந்த வகையில் அவரை ‘இயக்குநர்களின் இயக்குநர்’ என்றழைக்கலாம்.
சிறந்த இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நன்மதிப்பைப் பெற்றவர் மணி ரத்னம். ‘சத்ரியன்’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘டும் டும் டும்’, ‘ஃபை ஸ்டார்’ ஆகியவை பிறர் இயக்கி, மணி ரத்னம் தயாரித்த தரமான ஆக்கங்கள். மேம்பட்ட தொழில்முறை அணுகுமுறை, அனைவரின் பங்களிப்புக்கும் முறையான அங்கீகாரத்தையும் சிறந்த ஊதியத்தையும் வழங்குவது என மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கென்று தமிழ் சினிமாவில் தனி மதிப்பு உண்டு.
அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை சினிமாவாக்கும் நெடுங்காலக் கனவு மணி ரத்னத்தின் வழியே நனவாகிக் கொண்டிருக்கிறது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து இரண்டு பாகங்களாக ‘பொன்னியின் செல்வனை’த் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கிவருகிறார். முதல் பாகம் செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் 66 வயதாகும் மணி ரத்னம் மேலும் பல சிறந்த படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago