‘பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழு முதல் வெற்றிமாறனின் ‘விடுதலை’ வரை - இளையராஜா @ 80 வியத்தகு பயணம்

By ச.கோபாலகிருஷ்ணன்

தன் இசையால் உலகின் பல கோடி மக்களை வசீகரித்தவரும், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளருமான இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.

இளையராஜா தனது அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான 'பாவலர் பிரதர்ஸ்' என்னும் இசைக்குழுவில் ஒருவராகத் தமிழ்நாடு முழுவதும் பல மேடைகளில் இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். தன்ராஜ் மாஸ்டர், டி.வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் முறைப்படி இசை பயின்றார். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டம் வாங்கினார்.

பல்வேறு திரைப்படங்களில் கிட்டார், கீபோர்டு உள்ளிட்ட கருவிகளை வாசிக்கும் இசைக் கலைஞராக பணியாற்றினார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் 200 திரைப்படங்களில் இசைக் கலைஞராக பணிபுரிந்தார். அவரிடமிருந்தே திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

'அன்னக்கிளி' (1976) திரைப்படத்தின் மூலம் அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். 1970களில் வெற்றிபெற்ற தமிழ்த் திரைப்படங்கள்கூட 75 நாள், 100 நாள் என்று ஓடிக்கொண்டிருக்க, இந்திப் படங்களோ கிராமங்களில்கூட 25 வாரங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தன. புதுமையான இசையில் அமைக்கப்பட்ட பாடல்களே இந்திப் படங்களின் வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்ந்தார் பஞ்சு அருணாச்சலம். தமிழில் அப்படிப்பட்ட புதுமையான இசையைத் தருகிறவராக அவருக்குக் கிடைத்தார் இளையராஜா.

இளையராஜா தன்னிடம் போட்டுக் காண்பித்த ட்யூன்களுக்குப் பொருத்தமான கதையாக இருந்ததாலேயே 'அன்னக்கிளி' படத்துக்குத் திரைக்கதை எழுதி தயாரித்ததாகக் கூறியிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம். அவர் எதிர்பார்த்ததைப் போல 'அன்னக்கிளி' படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் வெற்றிபெற்றன. அடுத்த பல ஆண்டுகளுக்கு திரை இசையைக் கட்டி ஆளப் போகும் ஆளுமையின் வருகையை அறிவித்தன.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழில் திரைப்படங்கள் மீண்டும் வெள்ளி விழா கொண்டாடத் தொடங்கின. 1970களின் பிற்பகுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மூத்த இயக்குநர்கள், புதிய இயக்குநர்கள் என அனைவரும் இளையராஜாவுடன் கைகோத்தனர். 1980கள் தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆக அமைந்ததற்கு இளையராஜாவுக்கு இன்றியமையாத பங்குள்ளது.

சிவாஜி கணேசனின் கணிசமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய மாபெரும் நட்சத்திரங்களின் உருவாக்கத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இவர்கள் இருவரின் அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். விஜய், அஜித், விக்ரம். சூர்யா, தனுஷ் உள்ளிட்ட இந்தத் தலைமுறையின் இளம் நட்சத்திரங்களின் படங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

பிரியதர்ஷன், பிரதாப் போத்தன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன் ஆகிய இயக்குநர்களுடன் இணைந்து 1990களிலும் அதிகமான படங்களுக்கு இசையமைப்பவராகவும் அதிக வெற்றிப் பாடல்களைக் கொடுப்பவராகவும் இயங்கிவந்தார் இளையராஜா.

புத்தாயிரத்தில் திரைத் துறைக்குள் கால்பதித்த பாலா, தங்கர் பச்சான், மிஷ்கின் ஆகியோர் இளையாராஜாவுடனேயே அதிக எண்ணிக்கையிலான படங்களில் பணியாற்றியுள்ளனர். சேரன், கெளதம் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் பலர் அவருடன் ஒரு சில படங்களிலேனும் பணியாற்றியுள்ளனர். மிஷ்கின் இயக்கத்தில் 2020இல் வெளியான 'சைக்கோ' வெற்றிமாறன் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் 'விடுதலை' என இளையராஜாவின் இசைப் பயணம் தொடர்கிறது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவிருக்கும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இணையத் தொடரின் தமிழ், தெலுங்கு மொழிமாற்று வடிவத்துக்கான ப்ரோமோ தீம் இசை அமைத்திருக்கிறார். இதன் மூலம் ஓடிடி இணையத் தொடர் உலகத்திலும் கால்பதித்திருக்கிறார்.

தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பிற தென்னிந்திய மொழிகளில் நூற்றுக் கணக்கான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. அவருடைய முதல் தேசிய விருது ‘சாகர சங்கமம்’ என்னும் தெலுங்குப் படத்துக்குத்தான் கிடைத்தது. இந்தியிலும் குறிப்பிடத்தக்க வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா. ‘சீனி கம்’, ‘பா’, ஷமிதாப்’ ஆகிய படங்களின் மூலம் இயக்குநர் பால்கி அவரை மீண்டும் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார்.

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான் பின்னணி இசைக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. பல திரைப்படங்களில் இளையராஜாவின் பின்னணி இசையே படத்தில் ஒரு கதாபாத்திரமாகவும் திரை அனுபவத்தை மேம்படுத்தும் அம்சமாகவும் அமைந்துள்ளது. வசனங்களால் கடத்த முடியாத உணர்வுகளை இசையால் கடத்துவதில் தன்னிகரற்ற திறமைசாலி இளையராஜா.

தன் நெடிய திரைவாழ்வில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் இளையராஜா. மலேசியா வாசுதேவன், ஜென்ஸி, மனோ, சுஜாதா, சித்ரா ஆகியோர் பாடகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இசையமைப்பைத் தவிர பல நூறு வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். பல பாடல்களை எழுதியுள்ளார்.

‘நத்திங் பட் விண்ட்’, ‘ஹவ் டூ நேம் இட்’ உள்ளிட்ட தன் இசைத் தொகுப்புகள், திருவாசகப் பாடல்களை சிம்பொனி வடிவத்தில் இசையமைத்தது, குரு ரமண கீதம் உள்ளிட்ட ஆன்மிக இசைப் பாடல்கள் ஆகியவை இளையராஜாவின் திரையிசையைத் தாண்டிய பங்களிப்புகளில் சில.

‘சாகர சங்கமம்’, ‘சிந்து பைரவி’, ‘ருத்ரவீணா’ ஆகிய திரைப்படங்களுக்குச் சிறந்த இசையமைப்புக்காகவும் ‘பழசிராஜா’, ‘தாரை தப்பட்டை’ ஆகிய படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்காகவும் இளையாராஜாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ‘தாரை தப்பட்டை’ இளையாராஜாவின் ஆயிரமாவது படம். பின்னணி இசைக்கு மட்டும் கொடுக்கப்பட்டதால் ‘தாரை தப்பட்டை’க்கான விருதை அவர் வாங்க மறுத்துவிட்டார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் விருதை ஆறு முறையும், கேரள அரசின் விருதை மூன்று முறையும் ஆந்திரப் பிரதேச அரசின் விருதை ஐந்து முறையும் வென்றுள்ளார்.

இந்திய அரசு வழங்கும் பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள், சங்கீத நாடக அகாடமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட மாநில அரசு விருதுகள் எனப் பல உயரிய அரசு கெளரவங்கள் இளையாராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 80-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா. இன்றும் தன் ஸ்டுடியோவிலேயே அதிக நேரம் செலவழிக்கிறார். இசையமைப்பதிலேயே ஆழ்ந்திருக்கிறார். தன் இசையில் பல கோடி மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட இளையராஜா நீண்ட ஆயுள் வாழ்ந்து மென்மேலும் பல இசைச் சாதனைகளை நிகழ்த்த வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE