'13 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தோடு தியேட்டரில் படம் பார்க்கிறேன்' - அமித் ஷா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

2014ல் இந்தியாவில் ஒரு கலாச்சார விழிப்புணர்வு தொடங்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர மன்னர் பிருத்விராஜ் சவுகான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'பிருத்விராஜ்' திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் அக்‌ஷய்குமார் நாயகனாகவும், 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லர் நாயகியகாவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் இன்று புதுடெல்லியில் நடந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்கிறேன். இந்தியாவின் கலாச்சாரப் போர்களை சித்தரிக்கும் இப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு இல்லாமல், இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.

இந்தப் படம் பெண்களை மதிக்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது. இடைக்காலத்தில் பெண்கள் அனுபவித்து வந்த அரசியல் அதிகாரம் மற்றும் தேர்வு சுதந்திரம் பற்றி இந்தப் படம் பேசுகிறது. 2014ல் இந்தியாவில் ஒரு கலாச்சார விழிப்புணர்வு தொடங்கியது. அது இந்தியாவை மீண்டும் உயரத்திற்கு கொண்டு செல்லும்" என்றும் அமித் ஷா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE