கடும் புழுக்கம், வேலை செய்யாத ஏசி, பயன்படுத்தப்பட்ட தீயணைப்பான்... - கேகே மரணத்தில் சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்

By கலிலுல்லா

பாடகர் கேகே உயிரிழப்பில் பல சந்தேகங்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் நேரில் கண்டதை விவரித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்ச் என்னும் இடத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி ஆடிடோரியத்தில் நேற்றிரவு நடபெற்ற கல்லூரி கலாசார நிகழ்ச்சியில் பாடகர் கேகே எனப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் கலந்துகொண்டார். திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர், தான் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

பாடகர் கேகே கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகத்தினருக்கு எதிராக பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை நிர்வாகம் மேற்கொள்ளத் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரசிகர்கள் கூறும்போது, 'இந்த நிகழ்ச்சி திறந்தவெளி பரப்பில் நடைபெறவில்லை. மாறாக இது ஒரு ஆடிடோரியத்தில்தான் நடைபெற்றது. அங்கிருக்கும் ஏசி கூட வேலை செய்யவில்லை. ஏசியை ஆன் செய்யுமாறு கேகே அடிக்கடி கோரியபோதும், அவர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

பொதுவாக மூடிய அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏசி பயன்படுத்துவதால், அது உடல் வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தும். அதிக ஈரப்பதம் பெரும்பாலும் வயதானவர்களுக்கு, மாரடைப்பு வரக் காரணமாக அமையும் என்கின்றனர். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கூற்றை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

'இந்த மாரடைப்பு இயற்கையானதல்ல' என ரசிகர் ஒருவர் விளக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், தேவைக்கு அதிகமாக அந்த நிகழ்ச்சியில் கூட்டத்தை சேர்த்தது பற்றியும், கேகே ஏசியை போட சொல்லி கோரிக்கை விடுத்தது குறித்தும் அவர் விளக்கியிருக்கிறார்.

''பாடகர் கேகே கலந்துகொண்ட நேற்றைய நிகழ்ச்சியில் ஏசி வேலை செய்யவில்லை. அதிகமாக வியர்த்ததால், ஏசி வேலை செய்யாதது குறித்து புகாரும் அளித்திருந்தார். அதுவொரு திறந்த வெளி மைதானமில்லை. ஆகவே அவர்கள் ஏசி வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அதிக பணம் வசூலிக்கும் நிர்வாகம், குறைந்தபட்சம், அங்கிருக்கும் உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதையாவது கவனித்திருக்க வேண்டும்.

வீடியோவை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அதில் கேகே வியர்வையையும் புழுக்கத்தையும் சமாளிக்க முடியாமல் அவதிப்படுவதைக் காண முடியும். ஏசியை ஆன் செய்யவும், சில விளக்குகளை அணைக்கவும் அவர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல ஏராளமானோர் எந்த அனுமதியும் இன்றி வாயில்களை உடைத்துக்கொண்டு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தனர். நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? செக்யூரிட்டிகள் எங்கே சென்றனர்?

கொஞ்சம் கொல்கத்தாவின் வெப்பத்தை யோசித்து பாருங்கள். அதேபோல ஏசி வேலை செய்யாத மூடிய ஒரு ஆடிட்டோரியத்தில் பெரும் கூட்டத்துக்கு இடையிலிருக்கும் ஒருவர் உங்கள் சத்தங்களையெல்லாம் கடந்து கத்தி பாட வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இந்த மாரடைப்பு இயற்கையானதல்ல'' என பதிவிட்டிருக்கிறார்.

நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தால் தத்தளித்து வருகிறது. அதீத வெப்பம் குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது இதய துடிப்பை வேகப்படுத்தி, மாரடைப்புக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் குறிப்பாக பாடகர் கேகே கலந்துகொண்ட அந்த நிகழ்வில் அனுமதியின்றி உள்ளே நுழைந்தவர்களை கட்டுப்படுத்த தீயணைப்பான்கள் பயன்படுத்தபட்டுள்ளன. இதனால், அந்த இடம் முழுவதுமே புகைமூட்டமாகியுள்ளது. அதிலிருந்து வெளியேறிய வாயு அங்கிருந்தவர்களை பாதித்திருக்கிறது. கேகேவுக்கு ஒருவேளை ஹிஸ்டோடாக்ஸிக் ஹைபோக்ஸியா அல்லது மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

நெரிசலான இடத்தில் தீயை அணைக்கும் கருவியை தெளிப்பது ஹிஸ்டோடாக்ஸிக் ஹைபோக்ஸியாவை ஏற்படுத்தும், இது மூச்சுத்திணறல் மற்றும் பலருக்கு மரணத்தை விளைவிக்கும் என்பது கூட கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியதா? அவர்கள் படித்தவர்கள் தானே? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆடிட்டோரியத்திற்குள் தீயணைப்பு கருவியை பயன்படுத்தியதால் அது கே.கே.க்கு மூச்சுத் திணறலை உருவாக்கியுள்ளது. இது ஒரு மோசமான நடவடிக்கை. அபத்தத்திலும் அபத்தம். #JusticeForKK" என்று மற்றொரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

நிர்வாகம் ஏன் அவரை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரசிகர்களின் இத்தனை கேள்விகள், முக்கியமான பாடகரை அழைத்து நிகழ்ச்சியை சரியான முறையில் ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகத்தின் பொறுப்பின்மை உணர்த்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE