'இளைப்பாருங்கள் நண்பரே..'  - பாடகர் கேகே மறைவுக்கு இசையமைப்பாளர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

பாடகர் கேகே மறைவையொட்டி இசையமைப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா, சந்தோஷ் நாரயணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகரான 'கேகே' என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் நேற்று பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிச் சென்றார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் ஒப்புதலைப் பெற்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடகர் கேகே-வின் மறைவையொட்டி இசையமைப்பாளர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் 'உயிரின் உயிரே' மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான 'கொஞ்சி கொஞ்சி' பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ''சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே... நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே'' என்று தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இரங்கல் பதிவில், ''இளைப்பாருங்கள் நண்பரே. இது பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE