“வாழ்க்கை மீது நம்பிக்கை பிறக்கும்” - '777 சார்லி' குறித்து கார்த்திக் சுப்பராஜ்

By செய்திப்பிரிவு

'இந்தப் படத்தின் கதை நிச்சயமாக பதிவு செய்யப் பட வேண்டிய கதை. இந்தப் படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும்' என '777 சார்லி' படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிக்கும் படம் '777 சார்லி'. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னட திரைப்படம் இது. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். அதேபோல் மலையாள பதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கிரண்ராஜ், ''நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்தப் படத்தை துவங்கினோம். நடிகர்கள் ரக்‌ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்தப் படத்துக்காக கொடுத்துள்ளனர். டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகதிறமையானவர்கள். தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாக பேசியுள்ளார். இந்தப் படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ் படம் என்று கூறுவீர்கள்'' என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில், ''கொரோனாவிற்கு பிறகு, இப்போதுதான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்‌ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்தப் படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்தப் படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

இந்தப் படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குநர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தின் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை. இந்தப் படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE