முதல் பார்வை | ரங்கா - விறுவிறுப்பு தூவப்பட்ட மேலோட்டமான படைப்பு

By கலிலுல்லா

தேனிலவுக்கு செல்லும் தம்பதிகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி பணம் பார்க்கும் கும்பலிடமிருந்து நாயனும் நாயகியும் எப்படி தப்பித்தனர் என்பது தான் படத்தின் ஒன்லைன்.

'ஏலியன் ஹெண்ட் சின்ரோம்' (alien hand syndrome) நோயால் பாதிக்கப்பட்ட ஆதி (சிபி ராஜ்), தனது குழந்தைப்பருவ க்ரஷ்ஷான அபிநயாவை (நிகிலா விமல்) தனது அலுவலகத்தில் சந்திக்கிறார். அவரைப்பார்த்ததும், பழைய நியாபகங்கள் தட்டி எழ, மீண்டும் காதல் வயப்படுகிறார். இருவர் வீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற, தம்பதிகள் இருவரும் தேனிலவுக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணலிக்கு செல்கின்றனர். அங்கே அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் அவர்களின் அந்தரங்க வீடியோக்கள் ரெக்கார்டு செய்யபட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பணமாக்கப்படுவது தெரியவருகிறது. இந்த கும்பலிடம் சிக்கி தவிக்கும் தம்பதிகள் எப்படி உயிர் பிழைத்து, அந்தரங்க வீடியோக்களை அழித்தார்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிபி ராஜ் தன் முழு உழைப்பையும் செலுத்தியிருக்கிறார். தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் கையை வைத்துக்கொண்டு அவதிப்படும் காட்சிகள் (ஆனால் என்ன அவ்வப்போது தன் கை தனது கட்டுப்பாட்டை மீறி செயல்படும் என்பதை மறந்துவிடுகிறார்) சண்டைக்காட்சிகள் என படத்துக்காக உழைத்திருக்கிறார். அபிநயாவாக நடித்திருக்கும் நிகிலா விமல் பாதி படத்துக்கு மேல் பயம் படர்ந்த முகத்துடனும், எப்போது என்ன நடக்கும் என்ற பதட்டத்துடன், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

மற்றபடி, சதீஸ், மனோபாலா, லொள்ளு சபா சுவாமிநாதன் வந்து செல்கின்றனர். அதுவும் மனோபாலா வயதான பாட்டிகளுடன், 'நயன்தாரா,ஹன்சிகா' என ஓடி பிடித்து விளையாடும் காட்சிகள் உண்மையில் நகைச்சுவை என்று தான் நினைத்து வைக்கப்பட்டதா? என தெரியவில்லை. அதேபோல படத்தில் நகைச்சுவை என சொல்லப்படும் எந்த காட்சியும் துளியும் ஒட்டவில்லை.

'தன்னுடைய வீடியோ வெளியாயிடுச்சுன்னு தற்கொலை பண்ற பொண்ணுங்க இருக்குற வரைக்கும் நான் இருப்பேன்' என வில்லன் சொல்லும் வசனம் கவனம் ஈர்க்கிறது. தம்பதிகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி பணம் பார்க்கும் கும்பல் குறித்தும், பேச முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், அதிலிருக்கும் பிரச்சினை குறித்தும் ஆழமாக பேசாமல், வெறும் விறுவிறுப்பை மட்டுமே வைத்து கதை நகர்த்தப்பட்டுள்ளது.

அந்தரங்க வீடியோக்கள் வெளியானால் பெண்கள் தற்கொலை செய்ய வேண்டியதில்லை என்பது குறித்து விழிப்புணர்வை காட்சியாக மாற்றாமல், மாறாக வசனத்தில் மட்டுமே கடந்து சென்றுள்ளது ஏமாற்றம். 'ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பார்ன் வீடியோக்களில் வருமானம் குவிகிறது' என்பதும், வெளிநாடுகளில் அதை நடிகர், நடிகைகளை வைத்து படமாக இயக்குவதும், இந்தியாவின் மறைமுக கேமரா மூலம் வீடியோக்களை ரெக்கார்ட் செய்வதும் நிலவுவதாக குறிப்பிடும் வசனம் கவனிக்க வைக்கிறது.

இடைவேளைக்குப்பின்னாக திரைக்கதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் பயணிக்கிறது. கமர்ஷியல் என்ற பெயரில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் முதல் பாதியின் அலுத்துப்போன காட்சிகளை தவிர்த்துவிட்டு, இரண்டாம் பாதியிலிருக்கும் விறுவிறுப்பை முதல் பாதியிலிருந்தே தொடங்கியிருந்தால் படம் இன்னும் கூடுதலாக கவனிக்கப்பட்டிருக்கும்.

ராம் ஜீவன் இசை விறுவிறுப்பு காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் அர்வியின் ஒளிப்பதிவும் ரூபனின் எடிட்டிங்கும் கச்சிதம்.

மொத்தத்தில் வழவழப்பான தேவையற்ற காட்சிகளை தவிர்த்துவிட்டு, படத்தின் ஒன்லைனுக்கு தகுந்த நியாயம் சேர்ந்திருந்தால் படம் கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE