'பத்தல பத்தல'... - அரசியலில் அப்டேட் ஆகும் கமல், மக்களின் வாழ்வியலை கவனிப்பதில்லையா?

By கலிலுல்லா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையில், இந்த பாடலை கமலே எழுதியும், பாடியும் இருக்கிறார். இந்த பாட்டின் வரிகள்தான் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங். ஒருபுறம் பாடலுக்கு வரவேற்பு இருந்தாலும், மறுபுறமும் பாடல் குறித்து விமர்சனும்ம முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு கடைசியாக தியேட்டரில் கமலைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் திரையில், அவரது குரலில், பாடலைக் கேட்கப்போகிறோம் என்ற ஆவலில் காத்திருந்தனர். அவர்களின் ஆவலுக்கு ஏற்றார்போல, ஜாலியான ஒரு பாடலாக வெளியாகியிருக்கிறது, 'பத்தல பத்தல' பாடல். இந்த வயதிலும் அடித்து ஆடுகிறார் கமல். அவரது எனர்ஜி லெவல் குறையவேயில்லை. அவரது குரலிலும் அதே எனர்ஜி. 'அரசியல் வேணாம், படம் மட்டும் போதும்' என அவரது ரசிகர்கள் பலர் இந்த பாடலைப்பார்த்த பிறகு சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், கமலோ, கலையாக இருந்தாலும் அதிலும் அரசியலுடன் தான் பயணிப்பேன் என்பதை ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லிருக்கிறார். அந்த அளவுக்கு அவரது 'பத்தல பத்தல' பாடல் வரிகளிலும் அரசியல் நெடி வீசுகிறது. `நீ எத்தினி குடிச்சாலும் இங்கு பட்டினி கூடாதே' என டாஸ்மாக் விவகாரத்தை கையிலெடுத்தவர், 'கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..' என அரசின் நிதிநிலைப்பற்றாக்குறையையும், கொரோனாவையும் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக அவரது ரசிகர்கள் டீகோட் செய்துவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், 'ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கையிலே' என அரசியலை அள்ளித்தெளித்திருக்கிறார். ஏரி, குளம் இருக்கும் பகுதிகளை பிளாட் போட்டு விற்பது என குட்டு வைத்தவர், ஒதுங்கிபோகாமல் களத்தில் இறங்கி வேலை பார்த்தால் நாடு மாறும் என அழைப்புவிடுக்கிறார். அதெல்லாம் ஓகே.. ஆனால், 'குலம் இருந்தும் வலைதளத்தில ஜாதி பேசும் மீமு' என அவர் குலத்தை தூக்கிபிடிக்கிறாரோ என சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

இந்த அரசியலையெல்லாம் கடந்து 'பத்தல பத்தல' பாடலில் மற்றொன்றும் பேசுபொருளாகியிருக்கிறது. அது அந்த பாடலின் ஸ்லாங்க். கமலைப்பொறுத்தவரை அவர் தனக்கு சென்னையின் வட்டார மொழி வழக்கு அத்துபடி என்பதை பல படங்களில் வெளிப்படுத்தியிருப்பார். உதாரணமாக 'காதலா காதலா' படத்தில் உதீத் நாராயணனுடன் இணைந்து 'காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது' பாடியிருப்பார். 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் 'கந்தசாமி, மாடசாமி, குப்புசாமி ராமசாமி கல்யாணம் கட்டிக்கிட்டாங்கோ' என்று பாடியிருப்பார். அந்த படங்களிலுமே அவர் அந்த வட்டார மொழியை பயன்படுத்தியிருப்பார். 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்திலும் கூட அவருக்கு அந்த கிரேசி மோகன் வசனத்தில் சென்னை மொழியை பேசியிருப்பார்.

ஆனால், இது தான் சென்னையின் வட்டார மொழி என சில டெம்ப்ளேட்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த டெம்ப்ளேட்டுகளுக்குள் கமல் சிக்கி இன்றைக்கும் வெளியில் வர முடியாமல் தவிக்கிறார் என சில விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. 'காசுமேல காசு வந்து' பாடலும் சரி, 'கந்தசாமி மாடசாமி' பாடலும் பாடப்பட்ட காலக்கட்டத்தையும், தற்போதைய காலக்கட்டமும் ஒப்பிடப்படுகிறது. சென்னையின் பூர்வ குடிகளின் மொழியை புரிந்துகொள்ள யூடியூப் தளமே போதுமானதாக இருக்கிறது. அவர்களின் கானா பாடல்களுடன், கமலின் 'பத்தல பத்தல' பாடலை ஒப்பிட்டுப்பார்த்தால், அது அந்நியத்தன்மை மேலோங்குவதை உணர முடிவதாக கூறுகின்றனர்.

'மேயாத மான்' படத்தில் 'எங்க வீட்டு குத்துவிளக்கு' பாடல் சென்னையின் வட்டார மொழியை பிரதிபலித்திருக்கும். 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'வம்புல தும்புல மாட்டிக்காத' பாடல் அப்பகுதி மக்களே பாடும் பாடலாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் இயல்புத்தன்மை இழையோடுவதை காண முடிந்தது. பூர்வீக மக்களுடன் நெருங்கிப் பழகியவர்களே கூட, 'ஏமாந்து பூடாத..நாறி பூடும்' போன்ற வார்த்தைகளை அம்மக்கள் பயன்படுத்துவதில்லை என்கின்றபோது, 'பத்தல பத்தல' பாடலில் இதுபோன்ற வார்த்தை பிரயோகம் மூலம் உலக நாயகன் ஏன் அதை சென்னையின் மொழியாக கட்டமைக்கிறார் என்ற கேள்வி எழுப்பபடுகிறது.

அதேபோல, 'உட்டாலக்கடி' என்பது கூட வழக்கொழிந்து போன வார்த்தையாகவே கருதப்படுகிறது. சென்னை மொழியை பாடலில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக வரிகளில் வேண்டுமென்றே வலிந்து திணித்த ஒரு தொனி இருப்பதாகவும், இயல்புத்தன்மையோடு அந்த பாட்டை ரசிக்க முடியவில்லை என்றும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

சென்னை மக்களின் வட்டார மொழியில், அந்த மக்களில் ஒருவராக பாடும் கமல், 'இது முடிச்சவிக்கி பிரேமு, ஒன்னா நம்பர் சொக்கா திருடி பிளேடு பக்கிரி மாமே, அது சரக்கடிக்கும் சோமு, இவன் சுண்டி சோறு சீனு, வெள்ள பவுடர் கோடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு' என அந்த மக்கள் குறித்த எதிர்மறை பார்வையை இந்த வரிகள் முன்வைப்பதால், பலர் அதிருப்தியடைந்துள்ளனர். அந்த மக்கள் குறித்த இதுபோன்ற பிம்பங்கள், தெரிந்தோ, தெரியாமலோ, பாடலாகவோ, காட்சிகளோவோ தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதில் சிக்கல் தொடர்கிறது. இது போன்ற சிக்கல்கள் காரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதிவாசிகளின் வாழ்வியலை வரிகளாகவோ, காட்சிகளாவோ பதிவு செய்யும் போது, மெனக்கெடலுடன், கூடுதல் கவனம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

மற்றபடி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல் குரலில் ஒலிக்கும் அந்த பாடல் அவரது ரசிகர்களின் பேவரைட் லிஸ்டிலும் இடம்பிடித்திருப்பதை மறுக்க முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE