வேல் யாத்திரைக் காட்சி... - கவனம் ஈர்த்த உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆர்ட்டிக்கள் 15'. இந்தத் திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், 'பிக்பாஸ்' ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ''எல்லோரும் சமம்னா யார்தான் ராஜா?" என்ற கேள்வியுடன் இந்த ட்ரெய்லர் தொடங்குகிறது. சாதி காரணமாக சத்துணவு பணியாளர் சமையலுக்கு அண்மையில் திருப்பூரில் உள்ள பள்ளியில் ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது படத்தில் ஒரு காட்சியாக இடம்பெற்றிருக்கிறது.

சாதி ரீதியான வசனங்கள், அரசியல் குறியீடுகள் தைரியமாக அணுகப்பட்டுள்ளன. உதாரணமாக வேல் யாத்திரை தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பிடித்துள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 'ஆர்டிக்கள் 15' படத்தின் கதைக்களத்தை தமிழ்நாட்டுக்கு ஏற்றார்போல சில மாற்றங்களை செய்து அருண் ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதியை உருவாக்கியிருக்கிறார் என தெரிகிறது. மே 20-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே இன்று மாலை 6.40 மணி அளவில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் நீக்கப்பட்டது.பின்னர் 8.55 மணி அளவில் வெளியிடப்பட்டது.

ட்ரைலர்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE