'ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கை தேவை' - ஐசியூவிலிருந்த குழந்தை குறித்து பிரியங்கா சோப்ரா கருத்து

By செய்திப்பிரிவு

கடந்த 100 நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த தனது குழந்தை தற்போது வீட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடியும், நிக் ஜோன்ஸ் குழந்தையின் கையைப் பிடித்தபடியும் காட்சியளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன், தனது மகள் NICU (நியோனாடல் இன்டென்சிவ் கேர் யூனிட்) யில் 100 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டியிருந்தது தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

''கடந்த சில மாதங்களாக எங்கள் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போல இருந்தது. பலரும் இந்த சூழலை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது அறிகிறோம். 100 நாட்களாக NICU தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது இறுதியாக எங்கள் வீட்டில் இருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்துவமானது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கை தேவைப்படுகிறது. எங்களுடைய வாழ்க்கை சில மாதங்கள் சவாலானதாக இருந்தபோதிலும், பின்னோக்கிப் பார்த்தால், ஒவ்வொரு தருணமும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பது தெளிவாகிறது.

சிகிச்சையளித்த மருத்துவர், செவிலியர் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் அடுத்த அத்தியாயம் இப்போது தொடங்குகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE