விஜய் சேதுபதி நடிக்கும் மவுனப் படம்

By ஆர்.ஜெயக்குமார்

தமிழில் மவுனப் படக் காலகட்டத்துக்குப் பிறகு எடுத்த 1987-ல் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வசனமே இல்லாமல் வெளிவந்த ‘பேசும் படம்’ அந்தக் காலகட்டத்தில் புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது. அதற்கு அம்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது மீண்டும் மராத்தி இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலகர் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார். வசனமே இல்லாமல் எடுக்கப்படவிருக்கும் அந்தப் படம்தான் ‘காந்தி டாக்கிங்’. இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இதன் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர், ‘சா சசுச்சா’, ‘யெட’, ‘ஹஜரி’, ‘ரெஸ்பெக்ட்’ ஆகிய மராத்திப் படங்களை இயக்கியுள்ளார். இவற்றுள் பலவும் சடங்கு நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான முரணைப் பேசும் படங்கள். ‘காந்தி டாக்கிங்’ படமும் இதேபோல் ஒரு இந்து புராணக் கதையை உதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. திருப்பாற்கடலில் அசுரர்களும் தேவர்களும் அமிர்தம் கடைந்த கதைதான் இது. இதைச் சாரமாகக் கொண்டாலும், இந்தப் படம் சமகாலப் பிரச்சினைகளைப் பேசும் என்றும் புது முயற்சியாக இருக்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

“நாட்டில் உள்ள முதலாளித்துவம், இனப்பாகுபாடு போன்றவற்றை இந்தப் படம் பேசும். இந்தப் படம் ஒரு நல்ல மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என இதன் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் கூறியுள்ளார். இதை வைத்து இந்தப் படம் மிகத் தீவிரமான படம் என நினைக்க வேண்டும். இதை கேலி நகைச்சுவைப் படமாகத்தான் உருவாக்க இருக்கிறார்கள். 2021-ல் திட்டமிடப்பட்ட இந்தப் படம் கோவிட் காரணம் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE