“சிவாஜி, ராமராவ் மதிக்கப்படவில்லை... இந்தி சினிமாதான் இந்திய சினிமாவா?” - சிரஞ்சீவி பகிர்ந்த ‘அவமதிப்பு’ அனுபவம்

By செய்திப்பிரிவு

"இந்தி சினிமாவே இந்தியாவின் சினிமாவாக முன்னிறுத்தப்பட்டது. எனக்கு அது அவமானமாக இருந்தது" என்று பல்லாண்டுகளாக தெலுங்கு முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் சிரஞ்ஜீவி சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்தி திணிப்புக்கு எதிராக தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் சமீப காலமாக குரல் கொடுத்து வரும் நிலையில், சிரஞ்சீவியின் இந்தப் பேச்சும் முக்கியத்துவம் பெறுகிறது. 'ஆச்சாரியா' பட வெளியீட்டையொட்டிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சீரஞ்ஜீவி பேசியது: "1988-ஆம் ஆண்டு, நான் நடித்த 'ருத்ரவீணை' திரைப்படம் நர்கிஸ் தத் விருதை வென்றது. விருதைப் பெறுவதற்காக டெல்லி சென்றிருந்தேன்.

அப்போது, டெல்லியில் ஹால் ஒன்றில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். எங்களைச் சுற்றியுள்ள சுவர்களில் இந்திய சினிமாவின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் சுருக்கமான குறிப்புகள் இருந்தன. பிருதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா மற்றும் பலரின் புகைப்படங்கள் இருந்தன. அங்கிருந்தவர்கள் அந்தப் புகைப்படங்களை காண்பித்து அழகாக வர்ணித்தார்கள். இயக்குநர்கள், நடிகர்களைப் பாராட்டினார்கள்.

நாங்கள் அடுத்து தென்னிந்திய சினிமா குறித்தும் விரிவாக காண்பிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நடனம் ஆடும் ஒரு புகைப்படத்தை வைத்திருந்தார்கள். இந்திய சினிமாவில் அதிகமுறை ஹீரோவாக நடித்திருந்தவர் என்ற வகையில் பிரேம் நஸீர் படத்தை மட்டும் வைத்திருந்தார்கள். அங்கு ராஜ்குமார், சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன், ராமா ராவ் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லை.

எனக்கு அது அவமானமாக இருந்தது. நான் மிகவும் வருத்தமாக உணர்ந்தேன். இந்தி சினிமாவை மட்டுமே இந்திய சினிமாவாக முன்னிறுத்தினார்கள். மேலும் மற்ற படங்களை மாநில மொழி சினிமா என்று ஒதுக்கிவிட்டார்கள். அதன் பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை என்று கூட அவர்கள் கவலைப்படவில்லை. பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் மொழி தடைகளை உடைத்து என்னை பெருமையடைய செய்துள்ளன. நாம் இனி மாநில மொழி சினிமா இல்லை என்பதை எங்கள் திரைத்துறை நிரூபித்துள்ளது. தெலுங்கு சினிமா இந்தத் தடைகளை நீக்கி இந்திய சினிமாவின் அங்கமாகிவிட்டது. எங்களின் வெற்றியைக் கண்டு அனைவரும் வியப்படைகின்றனர். மொழி பாகுபாடுகளைக் நாங்கள் கடந்துவிட்டோம். பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆஆர்ஆர் படங்களைத் தந்த ராஜமெளலியின் பங்களிப்பு மிக முக்கியமானது" என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE