நடிகராவதற்கு முன் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இன்றும் இருக்கிறேன் - விதார்த் நேர்காணல்

By கலிலுல்லா

கடந்த 2019 ஆம் ஆண்டு சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'விக்ருதி' படத்தின் தமிழ் ரீ-மேக்காக வெளிவந்துள்ளது 'பயணிகள் கவனிக்கவும்' திரைப்படம். 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விதார்த் மாற்றுத்திறனாளியாக எதார்த்தமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரிடம் படம் குறித்து பேசினோம்.

'பயணிக்கவும் கவனிக்கவும்' படத்தில் உங்களுக்கான வாய்ப்பு அமைந்தது எப்படி?

குரங்கு பொம்பை படத்தின் ப்ரோமோஷனில் இயக்குநர் சக்திவேல் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். கிட்டதட்ட 5 வருமாக திட்டமிட்டிருந்தோம். அவர் எனக்கு நான்கைந்து கதைகள் சொல்லிருந்தார். அனைத்துமே நல்ல கதைகள். அதில் 2 கதைகளை படமாக்கலாம் என நினைத்திருந்தோம். அப்போது மலையாள படமான விக்ருதி படத்தை எடுக்கலாம் என அவர் கூறினார். எனக்கு அவரது இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. பிறகு இந்த படம் என்று சொன்னபோது, இன்னும் உற்சாகமாக இருந்தது. முடிவெடுத்ததும், படத்தின் அடுத்தடுத்த கட்ட பணிகள் உடனே தொடங்கின. நான் விக்ருதி படத்தை பார்த்திருக்கிறேன். அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மலையாளத்திலிருந்தே அப்படியே தழுவி நடிக்காமல் மாற்றலாம் என நினைத்தேன். அப்போது ராமகிருஷ்ணன் என்பவருடன் இரண்டு நாட்கள் பயிற்சி எடுத்து நடித்தேன்.

மாற்றுத்திறனாளியான எழிலன் கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தீர்கள்..இதிலிருந்த சவால் என்ன?

எல்லா படமுமே எனக்கு சவால் நிறைந்தது தான். பொதுவாக கதை கேட்கும்போது, இயக்குநர் ஒன்றைச் சொல்வார், நம் கற்பனையில் ஒன்று ஓடும். ஆனால், எனக்கு அப்படியான கற்பனையில் வேலை செய்ய விருப்பம் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இயக்குநர் என்ன நினைக்கிறார் என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும். காரணம், அவர் தான் சிரமப்பட்டு அந்த கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார். ஆகவே அவருடைய நோக்கத்தை புரிந்துகொண்டு, அவர் நினைப்பதைப்போல நடிக்கத்தான் நான் முயற்சி செய்வேன். கண்டிப்பாக என்னுடைய சிந்தனையை ஒருபோதும் அவர்களிடம் திணிக்கவே மாட்டேன். 'நீங்கள் நினைத்ததை நான் கொண்டுவந்துவிட்டேனா?' என்று தான் முதலில் கேட்பேன். அவருடைய நோக்கமும், என்னுடைய நோக்கமும் வெவ்வேறாக இருந்தால் சிதைந்துவிடும்.

அவருடைய பாதையில் பயணிக்கவே விரும்புவேன். அதனால் இயக்குநர் விரும்புவதை கொடுக்கவேண்டும் என்ற வகையில் எனக்கு எல்லா கதாபாத்திரங்களும் சவால் நிறைந்தது தான். இயக்குநர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதே சவால். மலையாள படமான விக்ருதியில் சுராஜ் நடிப்பை அப்படியே கொண்டுவர வேண்டும் என நான் நினைக்கவில்லை. மாறாக, நம்மோடு உலவும் மனிதர்களை அப்படியே திரையில் எதார்த்தமாக கொண்டு வர வேண்டும என தான் நினைத்தேன். சிறுவயதிலேயே என் அப்பாவின் நண்பர் சீனிவாசன் என்பவரை நான் பார்த்திருக்கிறேன். அவர் காது கேட்க முடியாத, வாய் பேச முடியாதவர்.

அவருடைய குரலைக் கேட்டு பழகியிருக்கிறேன். அத்தோடு ராமகிருஷ்ணன் என்பவருடன் பயிற்சி எடுத்தேன். நான் உணர்ந்த ஒரு விஷயத்தை முழுமையாக செய்ய வேண்டும் என நினைத்தேன். ரீமேக் படம் என்றாலே, நடிப்பில் ஒப்பீடு வரும். அதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? திரைத்துறையினர், சக நண்பர்கள், ரசிகர்கள் ரியாக்சன்ஸ் என்னவாக இருந்தது?

நிறைய போன்கால்கள் வந்தது. நான் படம் நடித்த அனைத்து இயக்குநர்களும் போன் செய்து பாராட்டினார்கள். இதைத்தாண்டி, பெரிய அளவில் பழக்கமில்லாத பலரும் பேசினார்கள். பீட்சா படத்தின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் உங்களிடம் பேசுவதற்கு முன்னதாக தொடர்பு கொண்டு அழுது பேசி பாராட்டினார். இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா, தொடர்பு கொண்டு 'என்னால முடியல, படம் பார்த்து அழுதுவிட்டேன்' என்றார். மனோ குடும்பத்துடன் படம்பார்த்து ஒரே அழுகை என்றனர். பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஓடிடி தளத்தில் இத்தனை பேர் படம் பார்த்திருக்கிறார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தியேட்டராக இருந்தால் உடனே ரிசல்ட் வந்துவிடும். ஓடிடியிலிருந்து ரிசல்ட் வர தாமதமாகும் என நினைத்தேன். ஆனால், உடனே வந்தது. இதையெல்லாம் விட்டுவிடுவோம். சாமானிய சினிமா ரசிகர்கள் பலரும் என் நம்பரை எப்படியோ வாங்கி தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய தொலைபேசி எண் எப்படி கிடைத்து, பாராட்ட வேண்டும் என மெனக்கெட்டு தொடர்பு எண்ணை பெற்றிருக்கிறார்கள்.

இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றியது? நீங்கள் நினைத்துபோல உங்கள் கதாபாத்திரம் வந்திருக்கிறதா?

ஷூட்டிங்கின் போது, நான் நடித்த காட்சியை மானிட்டரில் பார்க்கவே மாட்டேன். எடிட்டிங் செய்து டப்பிங் வரும்போது தான் பார்ப்பேன். நடுவில் ஃபுட்டேஜை காட்டினாலும் பார்க்க மாட்டேன். அது முழுக்க இயக்கநரின் விருப்பம். அதில் என் தலையீடு இருக்க கூடாது என நினைப்பேன். டப்பிங்கின்போதும் கூட இன்னும் ஒரு முறை பேசவா என கேட்டேன். ஏனென்றால் எனக்கு இறுதிவரை எந்த சீக்வன்சிலும் திருப்தி இருக்காது. மைனாவிலிருந்து இன்றைக்கு வரை, வேற படங்களைப்பார்ப்பது போல என்னால் என் படத்தை பார்க்க முடியாது. வேறு படங்களை ரசித்து பார்த்துவிடுவேன். ஆனால், என்னால் என் படத்தை அப்படி சாதாரணமாக பார்த்துவிட முடியாது. நிறைய மாற்றங்கள் குறித்தும், திருத்தங்கள் குறித்தும் யோசித்துகொண்டேயிருப்பேன். அதனால், எளிதாக ரசித்து என் படத்தை பார்ப்பது கடினம்.

பொதுவாக எந்த அடிப்படையில் கதைகளை தேர்வு செய்கிறீர்கள்?

கதை எனக்கு பிடித்திருக்கிறதா.. திருப்திகரமாக இருக்கின்றதா என்பதைத்தான் பார்ப்பேன். தவிர, என் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற வேண்டும் என கருதமாட்டேன். அப்படிப்பார்த்தால். கிடாயின் கருணை மனு படத்தை எடுத்துக்கொண்டால், 40 பேரில் நானும் ஒருவனாக இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் முக்கியமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்க மாட்டேன். அந்த படத்திலேயே மற்றவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். நல்ல கதைக்குள் நான் இருக்கிறேனா? அதில் நான் என்ன செய்கிறேன் என்பது தான் கவனிப்பேன். கதை கேட்டதும், ஸ்கிரிப்டை படித்துவிடுவேன். கதை என்னை முழுமையாக திருப்திபடுத்துகிறதா என்பதைத்தான் பார்ப்பேன்.

நீங்கள் திரைத்துறைக்கு வந்து ஏறக்குறைய 12 வருடம் நிறைவடைந்துவிட்டது. இந்த 12 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நீங்கள் பெற்றதும்? இழந்ததும் என்ன?

நான் எதையும் இழக்கவில்லை. நான் சாதாரணமான ஒரு மனிதனாகத்தான் வலம் வருகிறேன். நடிகராவதற்கு முன் எப்படி இருந்தேனோ இன்றும் அப்படித்தான் இருக்கிறேன். இழப்பு என்று எனக்கு எதுவும் கிடையாது. 12 வருட பயணம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்கள் செய்வது எப்போதும் நிறைவைத்தரும். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள், எனக்கு சினிமா பிடிக்கும், அதற்குள் வரவேண்டும் என ஆசைபட்டேன். வீட்டு சூழல் அல்லது ஏதோ ஒரு சூழலாக வர முடியவில்லை என்பார்கள்.

கலையின் தாக்கம் எல்லாருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். நாம் ஆசைப்பட்டதே, தொழிலாக மாறுவது ஒரு பாக்கியம். இதில் நான் எவ்வளவு வருமானத்தை ஈட்டினேன் என்பதல்ல முக்கியம். அது அடுத்த விஷயம். ஆசைப்பட்டதிலேயே வாழ்வதை பெரிய வெற்றியாக பார்க்கிறேன். பலரும் காலம் கடந்து தங்களின் விருப்பத்தை நிறைவேற துடிக்கிறார்கள். அந்த வகையில் பலருக்கும் நினைத்து கிடைக்காத விஷயம், நான் விரும்பி எனக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்து என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த சுப்புராம் இயக்கத்தில் அஞ்சாமை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். பயணிகள் கவனிக்கவும் படத்தை எப்படியோ, அப்படி இந்த படமும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். இன்னொரு படமும் நடித்து முடித்திருக்கிறேன். அதற்கான அறிவிப்பை படக்குழு முறையாக அறிவிக்கும். பிரமாதமான படமாக வெளிவரும். லைகா நிறுவனத்தின் சார்பில் யோகிபாபுவுடன் இணைந்து ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறேன். சாட்டை இயக்குநர் அன்பழகனுடன் இணைந்து ஒருபடமும், சற்குணத்துடன் இணைந்து படமும் நடித்து வருகிறேன். வரிசையாக நான்கைந்து படங்கள் நடித்துகொண்டிருக்கிறேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE