நான் கமர்ஷியல் படங்கள் பார்ப்பதில்லை: புஷ்பா, கேஜிஎஃப் 2 குறித்து நவசுதீன் 

By செய்திப்பிரிவு

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் தான் கமர்ஷியல் படங்கள் பார்ப்பதில்லை என்று பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பான் இந்தியா என்னும் புதிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலமாக தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டிலும் நன்றாக ஓடி, வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்த புதிய போக்கு பாலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் சமீபத்திய உதாரணங்கள் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள். இந்த புதிய தாக்கம், தென்னிந்திய சினிமா குறித்து பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

"உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் தென்னிந்திய படங்கள் பார்ப்பதில்லை. நான் கமர்ஷியல் படங்கள் எதையும் பார்ப்பதில்லை. தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் படம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் புஷ்பா, கேஜிஎஃப் 2 வெற்றி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. ஒரு படம் வெற்றி பெரும்போது, அடுத்து வரும் படங்கள் அனைத்தும் அந்த வெற்றிப்படத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். நாங்கள் அவ்வளவு வேகமாக தாக்கத்துக்குள்ளாகிறோம். சமீபத்தில் ஹிட்டான படத்தின் மொழி, வசனங்கள் மற்றும் அணுகுமுறைகளை பெறுகிறோம். இது எனக்கு பெரும் புதிராகவே இருக்கிறது.

இதில் நல்ல விசயம் என்னவென்றால், பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன வழங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கொடுப்பது நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அது முக்கியமானது. நானும் அப்படியான கமர்ஷியல் படங்களையே செய்கிறேன். ஆனால் அதுபோன்ற படங்களை பார்ப்பதில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஏன் இப்படி இருக்கிறது என்று இன்னும் தெரியவில்லை" என்றார்.

நவாசுதீன் சித்திக், டைகர் ஷெராஃப் மற்றும் தாரா சுதாரியாவுடன் நடித்த ஹீரோபந்தி 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. டிக்கு வெட்ஸ் ஷெரு, நூரானி செஹ்ரா மற்றும் அஃப்வாஹ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE