முதல் பார்வை | ஹாஸ்டல் - ரசிகர்களைப் 'பழிவாங்கும்' ஹாரர் காமெடி!

By கலிலுல்லா

ஆண்கள் விடுதியில் சிக்கிக்கொள்ளும் பெண் ஒருவர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச் செல்வதுதான் படத்தின் ஒன்லைன்.

படத்தின் நாயகன் அசோக் செல்வன், விடுதியில் தங்கி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். வட்டிக்கு கடன் வாங்கிய நண்பன் ஒருவனுக்காக ஜாமீன் கையெழுத்துப் போட்டு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் அவருக்கு பணம் தேவையாக இருக்கிறது. ஒருநாள் ஆண்கள் விடுதிக்குள் அழைத்துச் சென்று, தங்க வைத்து பத்திரமாக அழைத்து வந்தால் தேவையான பணத்தை கொடுப்பதாக வாக்களிக்கிறார் பிரியா பவானி சங்கர். இறுதியில் கட்டுப்பாடுகள் அடங்கிய அந்த ஹாஸ்டலிலிருந்து பிரியா பவானி சங்கர் எப்படி தப்பித்து வெளியே வந்தார்? அவர் ஏன் அந்த விடுதிக்குள் சென்றார் என்பது தான் 'ஹாஸ்டல்' படத்தின் மொத்தக் கதை. கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆதி கப்யரே கூடமணி (Adi Kapyare Kootamani) படத்தின் ரீமேக்தான் இந்த படம்.

கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோக் செல்வன் கல்லூரி மாணவராக பொருந்திப்போகிறார். எந்தவொரு மிகையும் இல்லாமல், படத்திற்கு தேவையான உழைப்பை செலுத்தியிருக்கிறார். அதிர்ஷ்ட லட்சுமியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், ஆண்கள் விடுதியில் இருக்கிறோம் என்ற எந்தவொரு பயமும் இல்லாமல், அசால்ட்டான உடல் மொழியிலும், திமிரான முக பாவனையிலும் ஈர்க்கிறார். சதீஷ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய பலம் முனீஷ்காந்த்தும், நாசரும் தான். இருவரும் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ரவி மரியாவின் நடிப்பு தேவைக்கு அதிகமாக செயற்கைத்தன்மையுடனும், ஆங்காங்கே சில காட்சிகளில் சிரிப்பு எட்டிப் பார்த்தாலும், பல காட்சிகள் ரசிக்க வைக்கவில்லை.

பொதுவாகவே, கல்லூரி, விடுதிகளை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளில் காதல், காமெடி, சென்டிமெண்ட் என ஜாலியான படமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் அது மிஸ்ஸிங். ஹாரர், காமெடி பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஒரு சில இடத்தில் காமெடி காட்சிகள் சிரிக்கவைத்தாலும், பெரும்பாலான இடங்களில் எரிச்சலூட்டுகின்றன. ஹாரர் படங்களால் ஏற்கெனவே பலமுறை டயர்டாகியிருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படமும் சேர்த்து பழிவாங்கியிருக்கிறது.

இரண்டாம் பாதி நகைச்சுவையாகவோ, பயமாகவோ இல்லாமல் வழக்கமான ஹாரர் காமெடி போல எழுதப்பட்டுள்ளது. அறந்தாங்கி நிஷா, விடுதி வார்டன் சாத்தப்பனை திருமணம் செய்துகொண்டு நெருங்கிய உறவில் ஈடுபட விரும்பும் பேயாக வருகிறார். இது படத்தில் எந்தத் தொடர்பை ஏற்படுத்தாமல், கதையின் ஒட்டத்திலிருந்து நம்மை விலக்கிவிடுகிறது.

பார்க் ஒன்றில் அசோக் செல்வன் அமர்ந்திருக்கும்போது பெண் உருவர் உடற்பயிற்சி செய்கிறார். அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது. இதுபோன்ற காட்சிகளை தடை செய்தாலாவது இயக்குநர்களுக்கு புதிய சிந்தனை பிறக்க வாய்ப்புள்ளது. போபோ சஷி இசையில் தேவா பாடிய பாடல் ஓகே ரகம். இரண்டாம் பாதியில் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாரின் உழைப்பை திரையில் காணமுடிகிறது.

மொத்தத்தில் 'ஹாஸ்டல்' திரைப்படம் ரீமேக் செய்யாமல் விட்டிருந்தால், நல்ல மலையாள படமாக தப்பித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE