அல்லு அர்ஜூனின் முடிவு பாராட்டத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

புகையிலை விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை தவறாக வழிநடத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், தனக்கு பெரும் தொகை அளிக்க முன் வந்த போதிலும், புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க மறுத்திருப்பது அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது!.

புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.

புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்!'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE