திரை விமர்சனம்: கே.ஜி.எஃப் 2

By செய்திப்பிரிவு

‘கே.ஜி.எஃப்’ எனும் தங்கச் சுரங்கசாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வரும் கருடன் என்பவனை கொல்லும் அசைன்மென்ட்டை, ‘ராக்கி’ எனும் தாதாவிடம் கொடுக்கின்றனர் கருடனின் சகாக்கள். அதற்காக தங்கச் சுரங்கத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் தொழிலாளிபோல ஊடுருவுகிறான். கொத்தடிமைகளின் கொட்டடியாகவும், தப்பிச் செல்ல முடியாத கொடுஞ் சிறையாகவும் அச்சுரங்கம் இருப்பதைப் பார்த்து, அந்த மக்களுக்காக மனம் இரங்குகிறான். அவர்களது நம்பிக்கையைப் பெறும் அவன், சரியான சந்தர்ப்பத்தில் கருடனைக் கொலை செய்வதுடன் முடிந்துவிடுவதாக முதல் பாகத்தின் கதை அமைக் கப்பட்டிருந்தது.

‘கே.ஜி.எஃப்’ சாம்ராஜ்ஜியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் ராக்கி, கருடனின் சகாக்களுக்கு எதிரியாகிறான். இதன் பிறகு ராக்கி எதிர்கொள்ளும் புதிய சவால்கள், அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதம், இறுதியில் ராக்கி தனது அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினானா, இல்லையா, அவனது நிலை என்ன ஆனது என்பதை சொல்கிறது இரண்டாம் பாகத்தின் கதை.

பொழுதுபோக்கை மட்டுமே விரும்பும் ரசிகர்களை ஹீரோயிச போதையிலேயே வைத்திருக்கும் உத்தி இரண்டாம் பாகத்தில் இன்னும் தீவிரமாகக் கையாளப்பட்டுள்ளது. இந்த உத்திக்கு ஈடுகொடுக்கும் விதமாக, ராக்கி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் யாஷின் உயரம், உடலமைப்பு, தோற்றம், ஸ்டைலான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் வேகம் ஆகியவை உதவுகின்றன.

குடிகாரக் கணவனால் வறுமையில் உழன்று, கவனிப்பாரின்றி, நோய்வாய்ப்பட்டு இறக்கும் ஒரு தாயின் மகன்தான் ராக்கி என்றால், இறக்கும் முன்பு அவள் தரும் வார்த்தைகளால் உந்தப்படுபவன் என்றால், மற்றொரு பெண்ணான நாயகியை, ‘என்டர்டெய்ன்மென்ட்’ என குறிப்பிடுவது மிக மோசமான ஆணாதிக்க மனோபாவம். அதேபோல, தந்தை மது அடிமை எனும்போது, அவரிடம் இருந்து ராக்கி எந்தபாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. தேவைப்படும்போதெல்லாம் மதுக் குப்பியை கையில் எடுக்கிறான்.

ஒரு நாட்டின் பிரதமரையே நேரில் சென்று மிரட்டும் ராக்கி, மற்றொரு காட்சியில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே புகுந்து பிரதமரின் கண் முன்பாகவே, முன்னாள் பிரதமரை சுட்டுக்கொல்லும் காட்சியை ‘கற்பனை’ என்கிற பெயரில் தணிக்கை குழு அனுமதிக்கும் என்றால், நாடாளுமன்றம் மீது, இன்றைய தலைமுறை பார்வையாளர்களுக்கு எப்படிப்பட்ட அபிமானம் வரும் என்கிற கேள்வியும் எழுகிறது.

ராக்கியின் ‘கே.ஜி.எஃப்’ தர்பாரை பிரதமரிடம் அம்பலப்படுத்தும் சிபிஐ அதிகாரியால், நாடாளுமன்ற எம்பி.க்களின் வங்கிக் கணக்குகளுக்கு ராக்கியின் அறக்கட்டளையில் இருந்துபணம் செல்கிறது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையெல்லாம்விட, சுரங்கத்தில் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள்,அங்குள்ள சகதொழிலாளி ஒருவர் கூறும்‘கட்டுக்கதை’களைக் கேட்டு தங்கள் விடுதலைக்காக ஏங்குகின்றனர். அவர்களது கட்டுக்கதைகளை உண்மையாக்க ராக்கி வந்துவிட்டான் என நம்புகின்றனர். ஆனால், கே.ஜி.எஃப்,ராக்கியின் வசமான பிறகு மீண்டும் அவனுக்காக சுரங்கத்துக்குள்ளே உழன்று உழைக்கிறார்கள். அப்படியானால் அதுவரையிலானஅவர்களது விடுதலைஉணர்ச்சி என்ன ஆனது என்பதை இயக்குநர் பிரசாந்த் நீல்தான் கூற வேண்டும்.

இந்தி மொழி பேசும் மாநில மக்களுக்காக இரண்டாம் பாகத்தில் நுழைக்கப்பட்டிருக்கும் ‘ஆதிரா’ (சஞ்சய் தத்) கதாபாத்திரத்துக்கு முதல்பாகத்தில் பெரிய அறிமுகம் இல்லாவிட்டாலும், அது, ராக்கிக்கு மரண அடி கொடுக்கும் விதம் ஆக்‌ஷன் விரும்பும் ரசிகர்களை உசுப்பேற்றி விடுகிறது. துணை கதாபாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருந்தாலும் ரீனாவாக வரும் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, செய்திதொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராக வரும் மாளவிகா அவினாஷ் ஆகிய இருவரும் தனித்து ஈர்க்கின்றனர்.

உலகம் முழுவதும் ஹீரோயிச சினிமாக்களின் தேவை தொடரவே செய்கிறது. ஆனால்,அவை, வன்முறையின் மீதும், தீய பழக்கங்கள்மீதும் பார்வையாளர்களுக்கு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கக் கூடாது. ‘கே.ஜி.எஃப்’ பொழுதுபோக்கின் தேவையை நிறைவு செய்தாலும், இந்த மோசமான பட்டியலுக்குள் இடம்பிடிக்கும் படம் என்பதை மறைக்கவே முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்