'பீஸ்ட்' படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? -  திருப்பூர் சுப்ரமணியம் மறுப்பு

By செய்திப்பிரிவு

'பீஸ்ட்' படத்தின் டிக்கெட் கட்டணம் கூடுதலாக விலைக்கு விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கான முன்பதிவு அண்மையில் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்த்துவிட்டன. இதனிடையே, 'பீஸ்ட்' படத்தின் டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு 800 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல யஷ் நடிக்கும் 'கே.ஜி.எஃப் 2' படத்துக்கு 200 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'கே.ஜி.எஃப் 2' படத்தின் வரவேற்பை பொறுத்து படம் வெளியாகி, ஒரு வாரம் கழித்து திரையரங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த வாய்ப்புள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்', 'பிகில்', 'மாஸ்டர்' மூன்று படங்களுமே விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தை தான் கொடுத்துள்ளன. அந்த வகையில் 'பீஸ்ட்' படமும் இதில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறோம்'' என்றவரிடம், ''பீஸ்ட் படத்தின் டிக்கெட் கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?'' என்ற கேள்விக்கு, ''அப்படி எதுவும் இல்லை. சிலர் தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்பிவிடுகின்றனர். டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மாயபிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆன்லைனுக்குச் சென்று பாருங்கள். எந்தத் திரையரங்கம் கூடுதல் வசூல் செய்கிறது என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள். அப்படியெல்லாம் யாரும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கவில்லை. முன்பதிவு தொடங்கிவிட்டது. எந்த திரையரங்கிலாவது 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் உள்ளதா என்பதை நீங்களே ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம். எல்லா இடத்திலும் 2 சதவீத குற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அதை எடுத்துகொண்டு எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்ட முடியாது.

1000 திரைகள் இருக்கும் இடத்தில் ஏதோ இரண்டு தியேட்டர்கள் அப்படி செய்யலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அதையே எடுத்துக்கொண்டு மற்ற எல்லாரையும் குற்றம்சாட்டுவதை எப்படி ஏற்றுக்கொள்ளள முடியும்? 'தமிழ்நாடு முழுவதும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அநியாயம் செய்கிறார்கள்' என்று பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE