30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்த மகேஷ்பாபு

By செய்திப்பிரிவு

உலக சுகாதார தினத்தையொட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நிதியுதவி அளித்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மகேஷ்பாபு ஒருபுறம் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது சமூக சேவையும் செய்து வருகிறார். மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு தனது அறக்கட்டளை சார்பாக உதவி வருகிறார். அந்த வகையில் அண்மையில் 30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ''உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆளுநர் ஸ்ரீ பிஸ்வபூசன் ஹரிசந்தன் பாராட்டினார். தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிய ஆந்திர மருத்துவமனை மருத்துவக்குழுவுக்கு நன்றிகள்" என்று நம்ரதா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு மகேஷ்பாபு நிதியுதவி அளித்துள்ளார். தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் தலா ஒரு கிராமத்தை மகேஷ்பாபு தத்தடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE