பீஸ்ட் படத்தின் 3-வது பாடல் இன்று மாலை வெளியீடு - ஆர்வத்தில் ரசிகர்கள்!

By செய்திப்பிரிவு

பீஸ்ட் படத்தின் 3-வது பாடல் இன்று (ஏப்.8) மாலை வெளியிடப்படும் என படக்குழு நேற்று தெரிவித்திருந்தது. முதல் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் 3-வது பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ் லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயின் 65வது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான 'அரபிக் குத்து' வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

அரபிக்குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கத்தொடங்கியது. இதையடுத்து, பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடினர். இந்நிலையில், படத்தின் 3-வது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் 3-வது பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். படம் இம்மாதம் 13-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE