சம்பள பாக்கி | 3 ஆண்டுகளுக்கு பிறகு மனு தாக்கல் செய்தது ஏன்? - சிவகார்த்திகேயனுக்கு ஐகோர்ட் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ’சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனு தாக்கல் செய்தது ஏன்?’ என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

’மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும், அந்தப் படத்தின் இயக்குநராக ராஜேஷ்தான் வேண்டுமெனவும் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டதாகவும், அந்தப் படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.

’மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ''மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்களுக்கு பணத்தை வழங்குமாறு தம்மிடம் சிவகார்த்திகேயன் கூறி விட்டு, தற்போது இந்த வழக்கை தெடர்ந்துள்ளார். டி.டி.எஸ் தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வில் நிலுவையில் உள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, ''இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனு தாக்கல் செய்தீர்கள்? டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும்போது மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன்?'' என நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பிற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பின்னர் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணை வரும் 13-ம் தேதி தள்ளிவைத்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE