முதல் பார்வை | மன்மதலீலை - பாதை மாறிய அடல்ட் காமெடி

By செய்திப்பிரிவு

மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே... அதையும் மீறி மாட்டிக்கொள்ளும் இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளே 'மன்மத லீலை'.

2010, 2020 என பத்து ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு காலக்கட்ட டைம்லைன்களில் சத்யா என்பவர் மூன்று பெண்களிடம் லீலைகளை செய்து மாட்டிக்கொள்கிறார். அந்த மூவரில் ஒருவர் சத்யாவின் மனைவி. அந்தச் சிக்கலிலிருந்து ஹீரோ தப்பிக்கிறாரா, இல்லையா என்பதுதான் 'மன்மதலீலை' படத்தின் கதைக்களம்.

சத்யா என்னும் பிளேபாய் கேரக்டரில் அசோக் செல்வன். கல்லூரி படிக்கும்போது லீலைகளை நடத்தும் இளைஞராகவும், அதேநேரம் பத்து ஆண்டுகள் கழித்து தொழில் முதிர்ச்சி கொண்ட மனிதனாக இருந்துகொண்டு சல்லாபப்படுபவராகவும் நடிக்க நல்ல வாய்ப்புள்ள கேரக்டரில் தனது சிறப்பை கொடுத்துள்ளார் அசோக் செல்வன். 'ஓ மை கடவுளே' படத்துக்கு பிறகு கவனம் ஈர்க்கும் படமாக அவருக்கு இது அமையலாம். அதுவும் அவரின் உருமாற்றம் கட்டமைக்கும் ஒரு பிம்பம், கவனம் ஈர்க்க வைக்கிறது.

சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் என மூன்று கதாநாயகிகள். இதில் ஸ்மிருதி வெங்கட் இதற்குமுன் செய்த படங்களைப் போலவே வந்து செல்கிறார். சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவரும் முக்கியக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து நடிப்பை கொடுத்துள்ளனர். ஜெயபிரகாஷ் கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் தனக்கே உரித்தான பாணியில் நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவர்கள் தவிர, வெங்கட் பிரபு தம்பி பிரேம்ஜி அமரன் மற்றும் கருணாகரன் இருவரும் உள்ளனர். எனினும் கருணாகரன் கதாபாத்திரம் திணிக்கப்பட்டது போல் உள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், தமிழ் அழகனின் ஒளிப்பதிவு ஓகே ரகமாக உணரவைத்தாலும், பிரேம்ஜி அமரன் இசையும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பும் 'மன்மதலீலை'க்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. 'இசை பிளேபாய்' என்ற பட்டத்துடன் பிரேம்ஜி இந்த முறை இசையில் சற்றே இறங்கி அடித்துள்ளார். காமெடி காட்சிகளில் தொடங்கி இறுதிக்காட்சி வரை பிண்ணனி இசையில் கவனம் ஈர்க்கிறார். அதேபோல், வெங்கட் பிரபுவின் புதுவிதமான கதை சொல்லாடலுக்கு தனது படத்தொகுப்பு மூலமாக உயிர் கொடுத்துள்ளார் வெங்கட் ராஜன்.

தனது உதவி இயக்குநர் மணிவண்ணன் பாலசுப்ரமணியம் கதை மற்றும் திரைக்கதையை ஓர் இயக்குநராக வெற்றிகரமாக கையாண்டுள்ளார் வெங்கட் பிரபு. 'மாநாடு' போலவே இதிலும் புதுவிதமான கதை சொல்லாடல், இரண்டு காலக்கட்டங்களில் நடக்கும் கதையில் அந்தக் காலகட்டங்களில் இருந்தவற்றை கண் முன் கொண்டுவந்தது என்பது போன்று பல இடங்களில் ஒரு தேர்ந்த இயக்குநராக சிறப்பான பணிகளை கொடுத்துள்ளார்.

படத்தின் புரமோஷன்களில் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக பயன்படுத்தினார் வெங்கட் பிரபு. ‘அடல்ட் காமெடி’, ‘அடல்ட் ரொமான்ஸ்’ மாதிரியான படங்களை பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் எடுக்கப்படுகிறது. ‘அமெரிக்கன் பை’ மாதிரி படங்களை இங்கே ஓபனாக எடுக்க முடியாது. நகைச்சுவையுடன் செக்ஸ் எஜுகேஷன் கொடுத்தால் நாம் ரசிப்போம். அதைத்தான் முயன்றிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

ஆனால், 'மன்மதலீலை', 'அமெரிக்கன் பை’ படத்துக்கு நிகரான கருத்துகளை முன்வைக்கிறதா என்றால், இல்லை. 'அமெரிக்கன் பை’ போன்ற படங்களில் பெண்களை எந்த இடத்திலும் இழிவுபடுத்தவில்லை. 'மன்மத லீலை' இங்கேதான் சறுக்கிறது. பல இடங்களில் பெண்களை குறிவைத்து மட்டுமே காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பதவி உயர்வுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது போன்ற வசனங்கள் காமெடி என்கிற போர்வையில் பெண்களுக்கு எதிரான வெறுப்பை உமிழும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண் - பெண் இருவரும் இணைந்து செய்யும் தவறுக்கு அந்த இருவருமே பொறுப்பு தான். ஆனால், இந்தச் சமூகம் காலம் காலமாக கட்டமைத்து வைத்தது போல் தவறுகள் அனைத்தையும் படத்தில் பெண் மேலே சுமத்தப்படுகிறது. காமெடியாக சொல்லப்படுவதால் இதை பார்வையாளர்களும் ரசிக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் பெண்களுக்கு எதிரான பார்வையை கொண்டுள்ள சமூகத்தில் இதுபோன்ற காட்சிகளும், கருத்துகளும் விஷத்தை மேலும் விதைக்கிறது. 'கோவா' படத்தில் தன்பாலின ஈர்ப்புக் காதலை ரொம்ப இயல்பாவும் பக்குவமாவும் திரைமொழியாக்கிய வெங்கட் பிரபு இங்கே சறுக்கியிருப்பதும் கவனிக்கவைக்கிறது.

கதையில் சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவர் மீதும் முழுவதுமாக குற்றம் சுமத்தவும் செய்கிறார்கள். ஆனால், இருவரையும் இதுபோன்ற குற்றச் செயல்களை செய்ய தூண்டியது எது என்பது போன்ற பின்புலம் எதுவும் இல்லாமல் வெறுமனே குற்றம் மட்டுமே சுமத்துகிறார்கள். இதுபோன்ற சில விஷயங்கள் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளன. படத்தின் 'ட்விஸ்ட்'கள் எதிர்பார்க்காதது போல் அமைக்கப்பட்டுள்ளன.

வெங்கட் பிரபு படங்களை பொறுத்தவரை இறுதிக்காட்சிகள் தான் அந்தப் படங்களையே தனித்து நிற்கவைக்கும். ஆனால், இந்தப் படத்தின் இறுதிக்காட்சி திருப்தி அளிக்கும் விதமாக இல்லை. 'மாநாடு' மாதிரியான படங்களை எடுத்த வெங்கட் பிரபுவிடம் இதுபோன்ற படங்கள் வந்திருப்பது சற்று ஏமாற்றம்தான். எனினும், தனக்கே உரித்தான எங்கேஜிங் அம்சங்களுடன் 'அடல்ட் காமெடி' என்கிற பெயரில் படமாக கொடுக்கப்பட்ட முற்பட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

மொத்தத்தில் படத்தின் டேக் லைனில் சொல்வதுபோல் வெங்கட் பிரபுவின் 'quicke' மசாலா எண்டர்டெயின்மென்ட்டே இந்த 'மன்மதலீலை'.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE