'ஸ்டார் வேண்டாம்... நடிகர்தான் தேவை' - கங்கனா குறித்து 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விளக்கம்

By செய்திப்பிரிவு

'என் படத்துக்கு நட்சத்திரங்கள் தேவையில்லை, நடிகர்களே தேவை' என்று 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் கிளர்ச்சியின்போது அங்கு வாழ்ந்து வந்த காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றத்தை அடிப்படையாக கொண்டு வெளியானப் படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மூன்று வாரங்களில் ரூ.300 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு மத்தியில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்தப் படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத்தை சந்தித்து பேசியதாகவும், இருவரும் ஒரு புதிய படத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், இருவரும் ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்டுள்ளதால், நடிகை கங்கனா அவருடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாகவும், அதன்படி சந்திப்பில் விவேக் சொன்ன ஒரு ஐடியா பிடித்துப்போக, அதை அடுத்த படத்தின் மூலம் இருவரும் எடுக்கவுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால். இந்தச் செய்திகளை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மறுத்துள்ளார். பாலிவுட் சினிமா இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், "என் படத்துக்கு நட்சத்திரங்களை விட, நடிகர்களே தேவை. 12 வருடங்களுக்கு முன்பு, எனது சினிமா பயணத்தை தொடங்கியபோது நான் விரும்பிய மாதிரியான சினிமாக்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், நட்சத்திரங்களுக்கான, அவர்களை மையப்படுத்திய சினிமாக்களை எடுக்க கூடாது என்றும் முடிவெடுத்தேன். அதன்படியே, நிற்க ஆசைப்படுகிறேன். மேலும் சினிமா என்பது எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கான ஊடகம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை நடிகை கங்கனா ரனாவத் வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE