'பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும்' - ஹேமா கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டி கேரள அரசை விமர்சித்த பார்வதி

By செய்திப்பிரிவு

கொச்சி: நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை திரையுலகின் பல மனிதர்களின் உண்மை ரூபங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று மலையாள நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்திருப்பதுடன், கேரள அரசையும் பொதுவெளியில் கடுமையாகச் சாடியுள்ளார்.

2017ல் நடிகை ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு மலையாள திரையுலகில் உள்ள பெண் நடிகர்களின் பிரச்சனைகளை விசாரிப்பதற்காக நீதிபதி ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தனது அறிக்கையை 2019 டிசம்பரிலேயே கேரள அரசிடம் சமர்பித்துவிட்டது. எனினும், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. மாறாக, இந்த கமிஷன் கொடுத்த அறிக்கையை ஆய்வு செய்ய கேரள அரசு மற்றொரு குழுவை அமைத்தது. இதனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் அறிக்கை வெளியாகாமல் உள்ளது.

இதையடுத்தே, கேரள அரசை நேரடியாக சாடியிருக்கிறார் நடிகை பார்வதி. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "கேரள அரசு முடிந்தவரை இந்த அறிக்கையை வெளியிடும் செயல்முறையை முடக்க முயற்சிக்கிறது. இதனால், மூன்று ஆண்டுகளாக இந்த அறிக்கைக்கான காத்திருப்பு நீடிக்கிறது. அறிக்கையை இறுதி செய்து மூன்று ஆண்டுகள் ஆகியும் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக, இந்த அறிக்கையை ஆய்வு செய்ய மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் ஒரு குழு அமைக்கப்படலாம்.

அடுத்த தேர்தல் வந்தவுடன் பாருங்கள், இந்த அறிக்கை திடீரென வெளிவரும். மேலும் பெண்களுக்கு ஆதரவான அரசாக இது மாறும் பாருங்கள். இது என்னுடைய கணிப்பு. எனவே தேர்தல் வரும் வரை காத்திருப்போம். அதேநேரம், இந்த அறிக்கை வெளிவந்தால் திரையுலகில் நாம் கொண்டாடும் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE