தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை நெகிழவைத்த இயக்குநர் ஷங்கர்

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகளின் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. கரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து இயல்புநிலை திரும்பியவுடன் முக்கியப் பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார் ஷங்கர். இப்போது அதன்படி, வரும் மே 1 ஆம் தேதி திருமண வரவேற்பை நடத்தவுள்ள ஷங்கர் இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய கேடி குஞ்சுமோனை சந்தித்து முதல் அழைப்பிதழை கொடுத்துள்ளார் ஷங்கர். 1993ல் வெளிவந்த 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலமாக ஷங்கர் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தை தயாரித்திருந்தவர் கே.டி.குஞ்சுமோன். இதன்பிறகே 'காதலன்' தொடங்கி 'ஐ' வரை பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரானார்.

இந்த விசுவாசத்தின் அடிப்படையில் கேடி குஞ்சுமோனை தனது மனைவியுடன் சென்று நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன், அவருக்கு முதல் அழைப்பிதழையும் கொடுத்து நெகிழவைத்துள்ளார் ஷங்கர். இந்தப் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

ஜென்டில்மேன் திரைப்படத்துக்கு பிறகு சில ஆண்டுகளாக கேடி குஞ்சுமோனுக்கும் ஷங்கருக்கும் மோதல் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த சந்திப்பின் மூலம் அந்த தகவல் வதந்தி என்பதை இருவரும் நிரூபித்துள்ளனர். கே.டி.குஞ்சுமோன் தற்போது, 'ஜென்டில்மேன்' இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதில் நடிகையாக கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா சக்கரவர்த்தி என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதேபோல் இசையமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE