உடைக்கப்பட்ட உலோகங்கள், புதைக்கப்பட்ட ஹைட்ரோஃபோன்கள்... ஆஸ்கர் வென்ற ’டியூன்’ இசையின் ’பின்னணி’

By குமார் துரைக்கண்ணு

உடைக்கப்பட்ட உலோகங்களாலும், பாலைவனங்களில் புதைக்கப்பட்ட ஹைட்ரோஃபோன்களாலும் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களம் கொண்ட 'டியூன்' (Dune)படத்திற்கான இசை உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது? இப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

நடந்து முடிந்த 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான 'டியூன்' சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.

"ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் நள்ளிரவு 2 மணிக்கு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். எனது மகள் ஜோ (Zoe) என்னை எழுப்பி, அந்த ஹோட்டலின் பாருக்கு அழைத்துச் சென்றாள்... வாவ்!"

"விருதுக்கு என்னை தேர்வு செய்த அகாடெமிக்கும், மிக முக்கியமாக 'டியூன்' திரைப்படத்திற்காக இசை அமைப்பு பணியில் பணியாற்றிய இசைக் கலைஞர்களுக்கும், எங்களது தலைவர் டெனிஸ் வில்லெனுவுக்கும் (டியூன் பட இயக்குநர்) நன்றி"

இந்த இரண்டு ட்வீட்களை பதிவு செய்திருந்தவர் ஜெர்மானிய இசை அமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மர் (Hans zimmer)தான். 'டியூன்' திரைப்படத்தின் இசைக்காக இந்தமுறை ஆஸ்கர் விருது பெற்றவர் இவர்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக பெஸ்ட் மியூசிக் கம்போஸருக்கான ஆஸ்கர் விருதை அவர் பெறுகிறார். இதற்குமுன் கடந்த 1995-ம் ஆண்டு 'தி லயன் கிங் ' திரைப்படத்தின் இசைக்காக ஹேன்ஸ் ஸிம்மர் ஆஸ்கர் விருதைப் பெற்றிருந்தார். இம்முறை விருது அறிவிக்கப்பட்டபோது, ஆம்ஸ்டர்டாமில் இருந்த ஹேன்ஸ் ஸிம்மர் உண்மையான விருதுக்குப் பதிலாக சிறிய வடிவிலான மாதிரியை கையிலேந்திய புகைப்படம் இணையத்தில் பரவி வைரலானது.

இதில் பெரிய வியப்பு என்னவென்றால், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ஹேன்ஸ் ஸிம்மருக்கு இது 12-வது நாமினேஷன். விருது வென்ற இரண்டு படங்களைத் தவிர, ரெயின் மேன் (Rain Man -1989), தி பிரீச்சர்'ஸ் வைஃப் (The Preacher’s Wife - 1997), அஸ் காட் அஸ் இட் கெட்ஸ் (As Good as It Gets - 1998), தி பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட் (The Prince of Egypt - 1999), தி தின் ரெட் லைன் (The Thin Red Line - 1999), கிளாடியேட்டர் (Gladiator - 2001), ஷெர்லாக் ஹோம்ல்ஸ் Sherlock Holmes - 2010), இன்செப்சன் (Inception - 2011), இன்டர்ஸ்டெல்லர் (Interstellar - 2015), மற்றும் டன்கிர்க் (Dunkirk - 2018) உள்ளிட்ட திரைப்படங்களுக்காகவும் நாமினேட் செய்யப்பட்டவர்தான் ஹேன்ஸ் ஸிம்மர்.

இதுதவிர இவர் இசையமைப்பில் வெளியான படங்களின் பட்டியலைப் பார்த்தால் நம் கண்கள் அகல விரிவது அனிச்சையாகிவிடுகிறது. 'தி டார்க் நைட்', 'பியர்ல் ஹார்பர்', 'புரோக்கன் ஆரோ', 'ஏஞ்சல்ஸ் டெமன்ஸ்', 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்ஸ் அட் வேர்ல்ட்ஸ் எண்ட்', 'டியர்ஸ் ஆஃப் தி சன்', 'பிளாக் ஹாக் டான்', 'பிளேட் ரன்னர்' உள்ளிட்ட பல ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கும், 'டாவின்சி கோட்', டாம் குரூஸின், 'தி லாஸ்ட் சாமுராய்', 'டுவெல் இயர்ஸ் ஏ ஸ்லேவ்', உள்ளிட்ட டிராமா வகை திரைப்படங்களுக்கும், 'பேட்மேன் vs சூப்பர்மேன்', 'தி அமேஸிங் ஸ்பைடர் 2', 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'எக்ஸ் மேன் டார்க் பீனிக்ஸ்' உள்ளிட்ட பல சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ஹேன்ஸ் ஸிம்மர்தான்.

சதா ஆங்கிலப் படங்களை மட்டுமே பார்ப்பவராக இருப்போர் தொடங்கி எப்போதாவது ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் உடையவராகவோ, சிறந்த ஆங்கிலப் படங்களைத் தேர்வு செய்து பார்க்கும் பழக்கம் உடையவராகவோ இருந்தாலும்கூட இவர் இசையமைத்துள்ள படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அதற்கு மேல் சொன்ன பட்டியல்களே சாட்சி.

அந்த வகையில் ஹேன்ஸ் ஸிம்மருக்கு ஆஸ்கரை வென்று தந்துள்ள 'டியூன்' திரைப்படமும் சாதாரண திரைப்படமல்ல. அதனால்தான் அத்திரைப்படம் 6 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. இதுவும் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த காவியப் படைப்பு. எனவே, இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது ஹேன்ஸ் ஸிம்மருக்கு அவ்வளவு எளிதான வேலையாக இருந்திருக்காது.

இந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் குறித்து பேட்டியளித்துள்ள ஹேன்ஸ் ஸிம்மர், "உடைக்கப்பட்ட உலோகங்களாலும், பாலைவனங்களில் புதைக்கப்பட்ட ஹைட்ரோஃபோன்களாலும் எதிர்காலத்தில் நடக்கும் இப்படத்திற்காக உருவாக்கப்பட்டது இந்த இசை. அது அறிவியல் புனைவு சார்ந்த கதையாகவோ, எதிர்காலத்தில் நடப்பதாகவோ, விண்வெளியோ, அதற்கும் தூரத்திலோ, அது எவ்வளவு அழகாக இருந்தது, இசைக் குறிப்புகள் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பது முக்கியமல்ல. இங்கு ஸ்டிரிங்ஸ் (கம்பிக் கருவிகள்) வரணும், இங்கு பிரெஞ் ஹார்ன் (காற்றுக் கருவி) என்பதுதான் என் மனத்தில் இருக்கும்.

இந்தக் கதையைப் பொறுத்தவரை, நூற்றாண்டுகள் கடந்து விண்வெளி முழுவதும் மனிதக் குரலின் ஒலி இருக்கும் என்பது எண்ணமாக இருந்தது. அதோடு டியூன் திரைப்படத்திற்காகவே மனிதர்களால் இசைக்க முடியாத விசித்திரமான தாளங்களை நாங்கள் உருவாக்கினோம். அதை நாங்கள் விசித்திரமான கருவிகளைக் கொண்டு உருவாக்கினோம்.

எனது நண்பர் சாஸ் ஸ்மித், ஒரு தொழில்முறை வெல்டர் மற்றும் தொழில்முறை கிட்டார் பிளேயர். அவருடைய உதவியுடன் விமான உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு ஸ்கிராப் மெட்டல்களை வாங்கினோம். அன்பின்னர் எனது குழுவினரின் இசைக்கருவிகளுடன், இந்த பூமியில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை விட மிகவும் வித்தியாசமான இசைக்கருவிகளை உருவாக்கி இணைத்தோம். இதனால்தான் மற்ற அறிவியல் புனைகதைகளில் வரும் இசையை விட 'டியூன்' திரைப்படத்திற்கு மிகவும் வித்தியாசமான ஸ்கோரை உருவாக்க முடிந்தது.

இதுதவிர, திபெத்திய போர் ஹார்னின் ஒலியை செல்லோவில் மிகைப்படுத்துவதற்கான வழிகளையும், கிடார்களில் இருந்து பேக் பைப்களின் இசையை உருவாக்குவது மற்றும் அதுபோன்ற விஷயங்களை நாங்கள் கண்டுபிடித்தோம். இவை தவிர எங்களிடம் அசாதாரண பாடகர்களான லோயர் கோட்லர், லிசா ஜெரார்ட் ஆகியோர் இருந்தனர்.

மேலும் சவுண்ட் இன்ஜினியர்களான மார்க் மங்கினி மற்றும் தியோ கிரீன் ஆகியோர் என்னுடன் இணைந்து ஒலி விளைவுகளை இசையுடன் இணைத்து அதிவேகமான ஒலியை காட்சிகளுக்காக உருவாக்கினர்.

பாலைவனத்திற்கு அடியில் வரும் சத்தம் மற்றும் மணல் புழு பயணிக்கும் சத்தத்தை நாங்கள் உருவாக்க, பாலைவனத்திற்கு வெளியே சென்று, பாலைவனத் தளத்தின் அடியில் ஒலியைப் பிடிக்க கடலில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோஃபோன்களைப் புதைத்து அதன்மூலம் அந்த ஒலியை, சவுண்ட் இன்ஜினியர்களான மங்கினி மற்றும் தியோ கிரீன் உருவாக்கினர்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கடின உழைப்பிற்காகத்தான் ஹேன்ஸ் ஸிம்மரின் இசைக்கும், ஒலி வடிவமைப்புக்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன என்றால் அது மிகையல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE