தென்னிந்திய சினிமா Vs பாலிவுட்... - இது சல்மான் கானின் சமகால பார்வை

By செய்திப்பிரிவு

மும்பை: "தென்னிந்திய படங்களை நானும் பார்த்து ரசிக்கிறேன். ஆனால், அந்த மொழிகளில் பணிபுரிய எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். மேலும், தனது பார்வையில் சமகால தென்னிந்திய சினிமாவுக்கும் பாலிவுட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். 'டைகர் 3' படத்தில் நடித்து முடித்துள்ள அவர், மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் 'காட்ஃபாதர்' படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக அவர் சம்பளம் ஏதும் பெறாமல், சிரஞ்சீவி உடனான நட்பின் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், நீண்ட நாள்களுக்கு செய்தியாளர்களைச் சந்தித்த சல்மான் கான் நிறைய விஷயங்கள் குறித்து பேசினார். சிரஞ்சீவி படத்தில் நடித்து வருவது தொடர்பாகவும், தென்னிந்திய மொழி திரைபபடங்கள் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதில், "சிரஞ்சீவியுடன் இணைந்து பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம். சிரஞ்சீவியை பல வருடங்களாக எனக்குத் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட. அவரின் மகன் ராம்சரணும் எனக்கு நல்ல நண்பர் தான்.

'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம்சரண் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளார். இந்தப் படம் வெற்றியடைய அவரின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்தேன். ராம்சரணை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சிறப்பான படங்களில் அவர் பணிபுரிவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்த சல்மான், தென்னிந்திய மொழி திரைப்படங்கள் தொடர்பாகவும் பேசினார்.

"தென்னிந்திய மொழி திரைப்படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. ஆனால், தென்னிந்தியாவில் பாலிவுட் படங்கள் ஏன் அவ்வளவாக வெற்றி பெறுவது இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தென்னிந்தியத் திரையுலகினர் ஹீரோயிசத்தில் நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். நாமும் அப்படித்தான். மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஹீரோயிசம் வேண்டும் என்பதையே இங்கும் விரும்புகின்றனர். ஆனால், இங்கு ஒன்றிரண்டு பேரைத் தவிர பலர் ஹீரோயிச படங்களை எடுப்பதில்லை. நாமும், பெரிய படங்களை விட ஹீரோயிச படங்களை எடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, நான் அதுமாதிரியான படங்களை மட்டுமே செய்கிறேன்.

அந்த மாதிரியான படங்கள் தான் மக்களிடம் எடுபடுகிறது. ஏனென்றால், அந்தப் படங்கள் மூலமாக மக்களிடம் ஒருவகையான இணைப்பு உருவாகிறது. சலீம் - ஜாவேத் காலத்திலிருந்தே இந்த வகையான படங்கள் வந்துகொண்டு தான் உள்ளன. ஆனால், இப்போது தென்னிந்தியத் திரையுலகினர் அதனை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்கள். மேலும், ரசிகர்கள் அன்பு என்பதும் தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது. இதனால் தான் தென்னிந்திய திரையுலகினர் வித்தியாசமான பாணியிலான திரைப்படங்களை எடுக்கின்றன. அவை நன்றாகவும் இருக்கின்றன.

நாம் இங்கு எடுத்த 'தபாங்' சீரிஸ் திரைப்படங்களை பவன் கல்யாண் தெலுங்கில் ரீமேக் செய்தார். அது அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதுபோன்ற படங்கள் உருவாக வேண்டும். தெற்கில் எழுத்தாளர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அழகான, அதேநேரம் கருத்துகள் நிறைந்த திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதனால் தான் சின்னப் படங்கள் எடுத்தாலும் அதனை மக்கள் போய்ப் பார்க்கிறார்கள்.

தென்னிந்திய படங்களை நானும் பார்த்து ரசிக்கிறேன். ஆனால், அந்த மொழிகளில் பணிபுரிய எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னிந்திய திரையுலகினர் என்னை அணுகும்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கேட்காமல், ஹிந்தியில் நடிக்கவே பெரும்பாலும் அணுகுகிறார்கள்" என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE