தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், எனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் செய்து, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசினார். 2019-ம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. 4 கோடி ரூபாய் பாக்கி சம்பளம் இதுவரை தரப்படவில்லை.

11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளேன்.

எனவே 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை எனக்கு கொடுக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அந்தத் தொகையை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான்61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாளை மறுதினம் (மார்ச் 31) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE