நாம் பாரபட்சமான சட்டங்களை எதிர்கொள்கிறோம்: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஜெசிகாவின் தெறிப்புகள்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: "நாம் பாரபட்சமானதும், மதவெறி கொண்டதுமான சட்டங்களை எதிர்கொள்கிறோம். இது நம் நாட்டை மேலும் பிளவுபடுத்தும்” என்று சிறந்த நடிகைகாக ஆஸ்கர் விருது வென்ற ஜெசிகா சாஸ்டெய்ன் பேசினார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 94-வது ஆஸ்கர் விருது விழாவில் மொத்தம் 24 பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், 'The Eyes Of Tammy Faye' என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ஜெசிகா சாஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டது. ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக்கொண்ட ஜெசிகா, கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் நடக்கும் அநீதிகளைப் பற்றி குறிப்பிட்டார்.

ஆஸ்கர் மேடையில் அவர் பேசியது: “தனிமையிலிருந்த கடுமையான காலங்களிலிருந்து நாம் வெளிவந்து கொண்டிருக்கிறோம். பலர் நம்பிக்கையற்றவர்களாக, தனிமைக்கு தள்ளப்பட்டதாக உணர்கிறார்கள். அமெரிக்காவில் ஏற்படும் இறப்புகளில் தற்கொலை முதன்மைக் காரணமாக இருந்து வருகிறது. இந்த வருத்தம் அனைவரின் குடும்பத்தையும் தொட்டுள்ளது. என்னையும்...

எல்ஜிபிடி சமூகத்தினர் கடந்த இரண்டாண்டுகளாக தங்களுக்கான இடம் இல்லாமல் அலைத்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பாரபட்சமானதும், மதவெறி கொண்டதுமான சட்டங்களை எதிர்கொள்கிறோம். இது நம் நாட்டை மேலும் பிளவுபடுத்தும் குறிக்கோளுடன் உள்ளது. உலகெங்கிலும் வன்முறையும் வெறுப்புக் குற்றங்களும் அப்பாவி பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன.

நம்பிக்கையற்றவர்களாக, தனியாக இருப்பதாக உங்களில் எவரும் உணர்கிறீர்கள் என்றால், உண்மையில் உங்களிடம் உள்ள அளவில்லாத தனித்துவத்தால் நீங்கள் விரும்பப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.

நான் டாமியின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டேன். அவளது இரக்கம் நம்மை முன்னோக்கி வழிநடத்தும் ஒரு வழிகாட்டும் கொள்கையாக நான் காண்கிறேன். நாம் நாமாக இருப்பதற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வன்முறை, பயங்கரவாதம் இல்லாத பயம் இல்லா வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE