நடிகர் சங்கத் தேர்தல் - பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை கைப்பற்றிய விஷால் அணி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

இதனிடையே, கடந்த மாதம் இந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாசர் - விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றுள்ளது. பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இதேபோல் பொருளாளர் பதவியில் போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றிபெற்றுள்ளார்.

மொத்தம் 29 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலும் பாண்டவர் அணியே முன்னிலை வகிக்கிறது. கடந்த முறையும் இதே அணியை வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், எதிர் தரப்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

தோல்வி முகமாக இருந்தபோதே இந்த அணியினர் மையத்தில் இருந்து வெளியேறினர். தேர்தல் நாளன்று பதிவானதாக கூறிய வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் 138 வாக்குச்சீட்டுகள் அதிமகாக இருந்ததாக குற்றம் சாட்டி பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் மையத்தை விட்டு வெளியேறினர்.

4.30 மணி நிலவரம்

தலைவர் பதவி
நாசர் - 240 வாக்குகள்
பாக்யராஜ் - 144 வாக்குகள்

துணை தலைவர் பதவி

பூச்சி முருகன் - 427 வாக்குகள்
கருணாஸ் - 426 வாக்குகள்
குட்டி பத்மினி - 201 வாக்குகள்
உதயா - 210 வாக்குகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE