முதல் பார்வை | கள்ளன் - சொல்லவந்த விஷயம் ஓகே... ஆனால் சொன்ன விதம்?

By மலையரசு

மனித மனங்களில் ஒளிந்திருக்கும் குரூரம் என்ன மாதிரியான செயல்களை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்துவதே 'கள்ளன்'.

வேட்டைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வேலு (கரு.பழனியப்பன்) 'பணத்துக்காக வேட்டையாடாதே, பசிக்காக வேட்டையாடு' என்று கூறும் தந்தையின் (வேல.ராமமூர்த்தி) சொல்லை வேதவாக்காக கொண்டு வேட்டையாடி பிழைக்கிறார். அரசாங்கம் வனவிலங்குகளை வேட்டையாட தடைபோட, வேலை இல்லாமல் இருக்கும் வேலு நண்பர்களின் அறிவுரைபடி தவறான பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். முதலில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் அவரின் குற்றங்கள், கொலை அளவுக்கு செல்கிறது. இடையில் காதல் மலரும் வேலுவுக்கு, காதலியுடன் சேர்ந்து வாழ, செய்யும் குற்றங்கள் என்ன நிலையை ஏற்படுத்துகிறது என்பதை விவரிப்பதே 'கள்ளன்' கதையும் திரைக்கதையும்.

கதாநாயகன் வேலுவாக கரு.பழனியப்பன். துரோகம், இயலாமை, குற்ற உணர்வு, ஆத்திரம், காதல் எனப் பல உணர்ச்சிகள் அவரின் பாத்திரம் பேசுகிறது. ஆனால், இந்த உணர்ச்சிகளுக்கு அவர் வெளிப்படுத்தும் முகபாவனைகள் ஏற்றார்போல் இல்லை. இன்னும் சிறப்பான உழைப்பை கொடுத்திருக்கலாம். நாயகியாக நிகிதா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். வேல.ராமமூர்த்தி, சவுந்தரராஜன் போன்ற பல நடிகர்கள் இருந்தாலும், நமோ நாராயணன் மற்றும் செல்வி பாத்திரத்தில் வரும் மாயாசந்திரன் இருவர் தான் படத்தை ஓரளவு காப்பாற்றுகிறார்கள். மாயாசந்திரனின் கதாபாத்திரத்துக்கு சில பின்னணிகளை சேர்த்திருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்கும். ஆனால் இயக்குநர் சந்திரா அவரின் பின்னணியை சில டயலாக்குகளில் முடித்துக்கொண்டுள்ளது ஏனோ?!

இப்படத்துக்கு இசையமைப்பாளராக கே. மறைந்த நா.முத்துக்குமார் போன்ற முன்னணி எழுத்தாளர்கள் பாடல்கள் எழுதியும் பாடல்களில் கே மெனக்கெடவில்லை. பின்ணணி இசை ஓகே ரகமாக படத்தை கடத்த உதவியிருக்கிறது.

எழுத்துத் துறையில் இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள சந்திரா தங்கராஜின் முயற்சிக்கு வாழ்த்துகள். வெளியில் செய்யும் கள்ளத்தனத்தை காட்டிலும், மனிதனின் மனங்களில் இருக்கும் கள்ளம் எவ்வளவு கொடூரம் நிறைந்தது என்பதை 'கள்ளன்' மூலமாக சொல்ல விழைந்திருக்கும் சந்திரா, அதற்காக எடுத்துக்கொண்ட திரைக்கதைதான் அவர் நினைத்ததை சொல்வதில் தடைக்கல்லாக மாறியுள்ளது.

கதையில் வில்லன் இல்லை, வேண்டும் என்றும் அவசியமும் இல்லை. வில்லன் இல்லாதபோது கதையை சுவாரஸ்யமாக்க குறைந்தபட்சம் குற்றத்தின் தன்மையை விரிவாக காட்டியிருக்கலாம். ஆனால், இங்கு காண்பிக்கப்படும் ஏராளமான 'குற்றங்கள்' மேலோட்டமாக செல்கின்றன. அதேபோல் கதையின் நாயகன் வேலுவை புத்திசாலி எனக் கூறிக்கொண்டே தவிர்க்க முடியாத சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்படுகிறார். இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலை என்பது நண்பர்களின் மோசமான அறிவுரை. அவரின் நண்பர் ஒவ்வொரு முறையும் அறிவுரை கூறும்போது புத்திசாலியான ஹீரோ அதைப் பற்றி கொஞ்சம் யோசிக்காமல் குற்றங்களை செய்யத் துணிகிறார். இதனால் கதாநாயகனை ஒரு வகையான பொம்மை பாத்திரம் போல் என எண்ண வைக்கிறது.

ஒன் லைனாக படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமாகத் தெரிந்தாலும், டெக்னிக்கல் சைடில் மோசமான பங்களிப்பால் திரைக்கதை தனது தடத்தை இழக்கிறது. ஹீரோவும், நண்பர்களும் சிறையில் தப்பிச் செல்லும் காட்சிகளில் காண்பிக்கப்படும் மழை, வெள்ளம் விஎஃப்எக்ஸ் அமெச்சூராக பார்வையாளர்களுக்கு எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தாமல் அந்தக் காட்சியை போலவே தத்தளிக்க வைத்துள்ளன. இப்படி திரைக்கதையில், டெக்னிக்கல் தரப்பில் ஏராளமான குறைகள் பார்வையாளனை படத்துடன் ஒன்ற வைப்பதில் தவற வைக்கிறது. திருப்பங்கள் இருந்தாலும் திரைக்கதை சொதப்பலால் அவை மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

பாராட்டுக்குரிய விஷயம், காதல் காட்சிகளை முதிர்ச்சியுடன் கையாண்டுள்ளது, மற்ற ஹீரோக்கள் சார்ந்த படங்களில் இல்லாத நம்பகத்தன்மையை கொண்டு வந்தது, செல்வி பாத்திரத்தின் ஆச்சரியமான வெளிப்பாடு ஆகியவைதான்.

மொத்தத்தில் ‘கள்ளன்’ முழுமை பெறாத மிஷனாக பார்வையாளனை பரிசோதிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE