முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி

By மலையரசு

மனதை மயக்கும் இசை போதையாகினால், அதனால் ஏற்படும் குற்றங்களும், விளைவுகளுமே 'யுத்த சத்தம்'.

ஒரு மழைப்பொழுதில் பதற்றங்கள் நிறைந்தபடி போலீஸில் புகார் கொடுக்க வருகிறார் படத்தின் நாயகி ராகவி (சாய்பிரியா தேவா). இன்ஸ்பெக்டர் (பார்த்திபன்) இல்லாததால் காத்திருக்கும்போது போலீஸ் ஸ்டேஷன் வெளியிலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு சாட்சியாக இருந்த ஆட்டோகாரரும் இறந்துபோக, இருந்த ஒரு துப்பும் இல்லாமல் போகிறது. இடையில், எங்கோ சென்றுகொண்டிருக்கும் டிடெக்டிவ் நாயகன் நகுலனை (கெளதம் கார்த்திக்) தற்செயலாக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரும் பார்த்திபன், அவருடன் சேர்ந்து இந்தக் கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார், ஏன் இந்தக் கொலை நடக்கிறது என்பதை சொல்வது தான் யுத்த சத்தத்தின் மீதிச் சத்தம். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 'யுத்த சத்தம்' நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள்.

துப்பறிவாளன் நகுலனாக படத்தின் நாயகன் கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக். படத்தில் இவர்தான் நாயகனா எனக் கேள்வி எழுகிறது. இரண்டாம் நாயகன் என்று வேண்டுமானால் சொல்லலாம் போல. அந்த அளவே அவரின் காட்சிகளும், நடிப்பும். இறுதி சண்டைக்காட்சியில் நாயகன் அடிவாங்கி கொண்டே இருப்பதும். இந்தச் சந்தேகத்தை வலுப்பெறச் செய்கிறது. அந்த அளவுக்கு அவரின் பாத்திரம் மனதில் நிற்கத் தவறுகிறது. ஒரு வரியில் சொன்னால்; எழிலை நம்பி அவர் கொடுத்த காட்சிகளில் தோன்றிச் சென்றுள்ளார் கெளதம்.

உண்மையில், இதில் நாயகன் பாத்திரம் எதுவென்றால் நடிகர் பார்த்திபனின் இன்ஸ்பெக்டர் கேரக்டரே. யூனிபார்ம் இல்லாத இன்ஸ்பெக்டராக படம் முழுக்க பார்த்திபனே வருகிறார். எனினும், அவரின் வழக்கமான பேச்சு இந்தப் படத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. காமெடி என ரைமிங், டைமிங்காக வழக்கம் போல் பேசி கதையின் ஓட்டத்தையும், ரசிகர்களையும் சோதிக்கிறார்.

ரோபோ ஷங்கரும் இதையே தான் செய்கிறார். 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் எழில் - ரோபோ ஷங்கர் காம்பினேஷன் ஓரளவுக்காவது சிரிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதில் கோபத்தை தான் வரவழைக்கிறது. ரோபோ ஷங்கர் தனது பாணியை மாற்ற வேண்டிய நேரம் என்பதை புரிந்துகொண்டால் நல்லது. நாயகியாக சாய்பிரியா தேவா. அவருக்கு இது நிறைய ஸ்கோப் உள்ள கேரக்டராக இருந்தும் பார்வையாளர்களுக்கும் கதைக்கும் ஏனோ ஒட்ட மறுக்கிறது. மனோ பாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஸ்வின் என தனது ஆஸ்தான படையை களமிறக்கி வழக்கம் போல் செய்துள்ளார் இயக்குநர் எழில்.

கிரைம் த்ரில்லர் கதையில் ஒளிப்பதிவுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்பி குருதேவ், பாடல்கள் உள்ளிட்ட சில இடங்களில் அதை பூர்த்தி செய்கிறார். இசை இமான். பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் அதே ரகம்தான். படத்துக்கு தீம் மியூசிக் தேவைதான். அதற்காக நடந்தாலும், காரில் சென்றாலும் என எதற்கெடுத்தலுமா தீம் மியூசிக் போட வேண்டும்... என்ன இமான் இதெல்லாம்?

சமீபகாலங்களில் காமெடி படங்களாக எடுத்த இயக்குநர் எழில், தன்மீதான காமெடி முத்திரையைப் போக்க இந்தப் படத்தை எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஆனால், அதைப் பூர்த்தி செய்வதற்கு, அவர் எழுதிய திரைக்கதை அவரின் நோக்கத்துக்கு தடையாக உள்ளது. காட்சிகளில் பல லாஜிக் ஓட்டைகளை தாண்டி திரைக்கதையிலேயே பல ஓட்டைகள். கதாபாத்திரங்களுடைய தன்மையும், வசனங்களும் கூட இந்தப் படத்தை காப்பாற்ற தவறுகின்றன.

படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரே புதுமையான விஷயம் டிஜிட்டல் போதைப்பொருள்தான். வித்தியாசமான இதனைக்கூட முழுமையாக சொல்லியிருந்தால் படம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் அதிலும் கோட்டைவிட்டுள்ளார் இயக்குநர் எழில். போதாதற்கு தேவையில்லாத காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்கள் குறித்த முகம்சுளிக்கும் வசனங்கள்... இவற்றால் ராஜேஷ்குமாரின் நாவலை குத்துயிரும், கொலையிருமாக படத்தின் நாயகி முதல் சீனில் காண்பிப்பது போலவே காண்பித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் 'யுத்த சத்தம்' இரைச்சல் சத்தமாக பார்வையாளனை கவரத் தவறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE