முதல் பார்வை | குதிரைவால் - சமகால தமிழ் சினிமாவின் அட்டகாச அட்டெம்ப்ட்... ஆனால்?

By மலையரசு

நினைவில் தொலைத்ததை கனவில் தேடினால் அதுவே ‘குதிரைவால்’.

வங்கி காசாளராக பணிபுரியும் சரவணன் (கலையரசன்) ஒருநாள் தனது கனவில் வால் இல்லாத குதிரையையும், சூரியன் மற்றும் சந்திரன் என இரண்டையும் ஒரே நேரத்தில் வானத்தில் காண்கிறார். உறக்கத்தில் இருந்து எழும்போது அவருக்கு குதிரைவால் முளைத்துள்ளது. இதன்பின் தனது பெயரை மறந்து தன்னைத் தானே ஃபிராய்ட் என அடையாளப்படுத்திக்கொண்டு வால் முளைத்த காரணத்தை தேடி அலைவதே 'குதிரைவால்' படத்தின் கதையும் திரைக்கதையும்.

சரவணன் கேரக்டரில் கலையரசன். குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கும் முதல் காட்சியில் தொடங்கி, நீலியிடம் சென்று தன்னை ஃபிராய்ட் என அறிமுகப்படுத்தும் இறுதிக் காட்சி வரை இத்தனை வருட தனது நடிப்பு பசிக்கு ஏற்ப உழைப்பை கொடுத்துள்ளார். குதிரைவாலோடு இருக்கும் நபராக, அதன் அசைவுகளுக்கு ஏற்றாற்போல் உடல்மொழியிலும் தனி கவனம் செலுத்தியுள்ளார்.

அவரை தவிர்த்து அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆறுமுக வேல், லட்சுமி பாட்டி என மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் தேவையான உழைப்பை கொடுத்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக வரும் பேபி மானசா, மாஸ்டர் பரிதி ஆகியோரின் நடிப்புகூட சிறப்பு.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் தூணாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரின் கேமரா கண்களால் வண்ணத்தால் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலும், சிங்கிள் ஷாட் மற்றும் வைட் ஷாட்கள் என கைவண்ணம் காண்பித்துள்ளார். அதைவிட உளவியல் ரீதியான உணர்வுகளை காட்சிகள் ரீதியாக கடத்துவதில் முக்கியப் பங்குவகித்துள்ளார்.

பாடகர் பிரதீப் குமாரின் இசையமைப்பாளர் அவதாரம் இங்கே கவனிக்கப்பட வேண்டியது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக முக்கிய இடம்பிடிக்க நிறைய வாய்ப்புள்ளது. அவரின் பாடல்களும், மார்ட்டின் விஸ்ஸர்ன் பின்னணி இசையும் திரை அழகியலை கண்களுக்கு மட்டுமில்லாமல் காதுகளுக்கும் விருந்தளிக்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இராஜேஷ். அவரின் எழுத்துகளை காட்சிப்படுத்தியுள்ளனர் மனோஜ் லியோனல் ஜாக்சன் மற்றும் ஷியாம் சுந்தர் என்ற இரட்டை இயக்குநர்கள். குதிரைவாலுக்கான தேடலை திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். ஆனால், கூர்ந்து கவனித்தால், அதனுள் சொல்லப்பட்டு இருக்கும் கனவுத்தன்மை, கற்பனை உலகம், காட்சியமைப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் நுண் அரசியல் குறியீடுகள் என ஒவ்வொரு விஷயங்களும் நம்மை யோசிக்க வைக்கிறது.

இதேபோல் நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள் கிளைக்கதைகளாக படம் நெடுகிலும் வருகின்றன. அந்த ஒவ்வொரு புனைவுகளும் சாதிய கட்டமைப்புகள் உட்பட சமகால மற்றும் முன்கால விஷயங்கள் பலவற்றை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இதன் திரைக்கதையும் மேக்கிங்கும் தமிழ் சினிமாவின் பிரதான காட்சி மற்றும் கதை சொல்லும் இலக்கணங்களைத் தகர்த்துள்ளன. படத்தின் முதல் பாதியில் நிறைய காட்சிகள் குழப்பினாலும், இரண்டாம் பாதியில் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக இணைப்பதால் பார்ப்பவர்கள் குதிரைவாலுக்கு ஏற்றாற்போல் செட் ஆக முடிகிறது. அதேநேரம், பாபுவாக வரும் சேத்தன் ஏன் இவ்வளவு விசித்திரமான முறையில் கொல்லப்பட்டார் என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தொங்கி நிற்கிறது.

தமிழ் சினிமாவுக்கு முழுக்க முழுக்க இது ஒரு புதுமையான படைப்புதான். வியாபார நோக்கத்துக்காக எந்த இடத்திலும் சமரசம் இல்லாமல் ஓர் அற்புதமான சினிமா லேங்குவேஜை பார்வையாளர்களுக்கு கடத்த மெனகெட்டுள்ளதை உணர முடிகிறது. நீலம் புரொடக்‌ஷன், பா.ரஞ்சித்தின் தயாரிப்புப் படங்களில் இது தனித்துவம் மிக்கதும் கூட. குறிப்பாக, உலக சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற படமாகவும் உள்ளது.

ஆனால், என்னதான் தரமான திரைப் படைப்பாக இருந்தாலும், எளிமையான பின்னணியை கொண்ட பார்வையாளனுக்கு குதிரைவாலின் புதுவித கதைச் சொல்லாடல் அதன் குழப்பங்களால் அந்நியப்பட்டு நிற்கும். 'குதிரைவால்' தனது திரைமொழியால் வேறொரு உலகத்தில் இருப்பதை போல உணர்வைக் கொடுத்தாலும், அதன் நாயகனைப் போலவே, வழியில் அதன் தடங்களில் சற்றே குழம்பி நிற்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE