முதல் நாளில் ரூ.3.55 கோடி, 6-ம் நாள் வரை ரூ.79 கோடி - வசூல் சாதனையில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

By செய்திப்பிரிவு

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் சர்ச்சைகளைத் தாண்டி வசூலைக் குவித்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் கடந்த வாரம் வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சர்ச்சைகள், எதிர்ப்புகள், பிரதமர் மோடியின் வாழ்த்து, பாஜகவின் ஆதரவு என இப்படம் குறித்த பேச்சுதான் பாலிவுட் வட்டாரத்தில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த நிலவரங்கள் வெளிவந்துள்ளன. கடந்த 10-ம் தேதி வெளியான இப்படம் 6-வது நாள் வரை, சுமார் ரூ.70 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளதாக தெரிகிறது.

ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3.55 கோடி என்ற அளவில் இருந்தது. அதுவே, ஐந்தாவது நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்) ரூ.18 கோடிகளை வசூலித்துள்ளது. முதல் நாளில் வசூலித்ததை விட இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம். இதன்மூலம் படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது தெளிவாகியுள்ளது.

படத்தின் முதல் ஐந்து நாட்களில் ரூ.60.20 கோடிகளை வசூலித்த இப்படம், நேற்று வரை சுமார் 77-79 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்துவிடும் என்பது உறுதியாகியுள்ளது. முதல் நாளில் ரூ.3 கோடி அளவில் மட்டுமே வசூலித்த எந்தப் படமும் இதுவரை ஒரு வாரத்தில் ரூ.100 கோடியை தொட்டதில்லை. இந்தப் படம் அந்த வரலாற்றை முயறியடிக்கும்.

இதனிடையே, ஆரம்பத்தில் 500 தியேட்டர்களில் வெளியான இப்படத்துக்கு இப்போது 1500 தியேட்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார் நடித்துள்ள ’பச்சன் பாண்டே’ நாளை வெளியாகவுள்ளது. அதற்கு கிடைக்க வேண்டிய பெரும்பாலான தியேட்டர்களை இப்போது ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் கைப்பற்றியுள்ளது. படத்தை பற்றிய வாய்மொழி பேச்சும், பாஜகவின் தேசிய அளவிலான விளம்பரமும் இந்த அளவுக்கு தியேட்டர்கள் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE