'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - முழு வரிவிலக்கு கேட்கும் பாஜக அல்லாத முதல் முதல்வர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கு வரிவிலக்கு கேட்டுள்ளார் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல். இப்படத்துக்கு முழு வரிவிலக்கு கோரும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களில் இவரே முதல் முதல்வர்.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் கடந்த வாரம் வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏக்கள், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதேபோல், ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்களும் அம்மாநில காங்கிரஸ் அரசிடம் வரிவிலக்கு கோரிக்கை வைத்தனர். முன்னதாக, பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது பாஜக ஆளாத ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒருவர் முதல்முறையாக இந்தப் படத்துக்கு வரி விலக்கு கேட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல்தான் அவர். காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக இருக்கும் அவர், " 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கான மத்திய ஜிஎஸ்டியை நீக்கி நாடு முழுவதும் வரி இல்லாமல் திரையிட மத்திய அரசு வழிவகுக்க வேண்டும்" என்றுள்ளார்.

மேலும், "சட்டமன்ற உறுப்பினர்கள் (எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் உட்பட) அனைவரும் ஒன்றாக இந்தப் படத்தை பார்க்க அழைப்பு விடுக்கிறேன். இன்று இரவு 8 மணிக்கு தலைநகரில் உள்ள ஒரு திரையரங்கில் எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து படத்தைப் பார்ப்போம்" என்றும் முதல்வர் பூபேஷ் பாகேல் அழைப்பு விடுத்து, தற்போது படத்தையும் எம்எல்ஏக்கள் உடன் அமர்ந்து பார்த்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE