முதல் பார்வை | ராதே ஷ்யாம் - விஷுவல் ட்ரீட் நிறைந்த ஆன்மா இல்லாத காதல் கதை!

By செய்திப்பிரிவு

காலம் தான் காதலை தீர்மானிக்கிறது. காலத்துக்கும் காதலுக்கும் இடையிலான போட்டியில் காலத்தை கணிக்கும் நிபுணன் கரைசேர்வதே, 'ராதே ஷ்யாம்'.

'கைரேகை கலையின் ஐன்ஸ்டீன்' விக்ரமாதித்யா அலைஸ் ஆதித்யா (பிரபாஸ்), இந்தியாவின் விவிஐபிகளுக்கு எதிர்காலத்தை கணித்து சொல்லும் கைரேகை இல்லை இல்லை பால்மிஸ்ட். காதல் ரேகை இல்லாததால் கல்யாணமே நடக்காது என தனக்கு தானே கணித்துக்கொண்ட ஆதித்யா, நாயகி பிரேரனாவை (பூஜா ஹெக்டே) சந்தித்த பின்பு அவரின் வாழ்வில் அனைத்தும் மாறுகிறது. காதல் வயப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களுக்கு சில சிக்கல்களை கொடுக்கிறது. இதிலிருந்து மீண்டும் இருவரின் காதலும் கரைசேர்ந்ததா, இல்லையா என்பதே 'ராதே ஷ்யாம்' படத்தின் கதை.

உலகப் புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாக பிரபாஸ். 'பாகுபலி', 'சஹோ' படங்களில் ஆக்ஷன் என்றால் இதில் ரொமான்டிக் அவதாரம். அதற்கேற்ப உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் வருகிறார். இந்த லுக் அவரை சாக்லேட் பாயாக சில இடங்களில் தெரியவைத்தாலும், சில காட்சிகளில் அவரின் வயது முதிர்வு எட்டிப்பார்ப்பது ஒப்பாதது போல் உள்ளது. ஆனால், கைரேகை நிபுணராகவும், காதலனாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி முழு படத்தையும் தனது தோளில் சுமந்துள்ளார். க்ளைமாக்ஸ் சீன்களில் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு இந்தப் படத்துக்கு அவர் கொடுத்துள்ள உழைப்பைச் சொல்கிறது.

பிரேரனாவாக பூஜா ஹெக்டே படத்தின் இன்னொரு பலம். காதல் படம் என்கிறதாலோ என்னவோ, எக்ஸ்ட்ரா பியூட்டியாக படம் முழுக்க தனது அழகால் பார்வையாளர்களை வசீகரிக்கிறார். அதே வசீகரம் அவரின் நடிப்பிலும் மிளிர்கிறது. பிரபாஸை உருகி காதலிப்பதல் தொடங்கி, அதே காதல் கைகூடாமல் போகுமோ என்று தவிப்பதிலும் சரி சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஆதித்யாவின் குருநாதர் பரமஹம்சராக சத்யராஜ், பிரேர்னாவின் பெரியப்பாவாக சச்சின் கெடேகர், கப்பல் கேப்டனாக ஜெயராம் மற்றும் ஜெகபதி பாபு, சத்யன் உள்ளிட்ட லிமிடெட் கேரக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் கதாபாத்திரத்தின் தேவையறிந்து நடித்துள்ளனர்.

கைரேகை சாஸ்திரத்தின் பிதாமகன் சத்யராஜை, ஒரு திட்டம் தொடங்க நாள் குறிப்பதற்காக விண்வெளி ஆராய்ச்சி குழு சந்திக்கிறது. அப்போதும் ஏற்படும் மூடநம்பிக்கை விவாதத்தில் ‛தெரியாததை அறிய வேண்டியது அறிவியல்... தெரியாததை பொய் என்று சொல்வதில்லை அறிவியல்' என்று சத்யராஜ் பீடிகை கொடுத்து பிரபாஸ் என்ட்ரிக்கு வழிவகுக்கிறார். இப்படியாக முதல் காட்சியுடன் விரியும் 'ராதே ஷ்யாம்' முதல் பாதியில் பிரபாஸ், பூஜா ஹெக்டே காதலை சொல்லுகிறது. ஆனால், இடைவெளி முன்பே படத்தின் கதையை அறிய முடிகிறது.

வழக்கமாக படத்தின் முதல் பாதி பார்வையாளர்களை என்கேஜிங் ஆக வைத்திருக்கும். ஆனால் இங்கு முதல் பாதி மெதுவாக செல்கிறது. படத்தின் திரைக்கதை யூகிக்கக்கூடிய கூறுகளுடன் உள்ளதும் குறையாக உள்ளது. படத்தின் அடிநாதமே காதல் தான். ஆனால், பிரபாஸ் பூஜாவை சந்திக்கும் காட்சியைத் தாண்டி அவர்களுக்குள்ளான காதல் காட்சிகள் மேலோட்டமாக இருப்பதால் மனதில் ஒட்டவில்லை. இது போன்ற ஒரு காதல் கதையில், தான் என்ன சொல்ல வேண்டும் என இயக்குநர் விரும்புகிறாரோ அதை பார்வையாளர்களுக்கு கடத்த காண்பிக்கப்படும் எமோஷன் வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், காண்பிக்கப்பட்ட எந்த எமோஷனும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.

காதல் ரேகை இல்லை என 'flirtationship' ரூலுடன் ஊர் சுற்றிக்கொண்டு பெண்களுடன் உல்லாசம் அனுபவிப்பதாக காண்பிக்கப்படும் பிரபாஸுக்கு பூஜா ஹெக்டே மீது ஏன் காதல் வருகிறது என்பது கூட விளக்கப்படவில்லை.

நிபந்தனையற்ற காதல், நேரம் மற்றும் விதி எனப் பேசும் இதன் பழமையான திரைக்கதை ரசிகர்களை படத்துடன் ஒன்றவைப்பதில் தடுமாறவைத்துள்ளது. பிரபாஸ், பூஜாவின் கெமிஸ்ட்ரி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். திரைக்கதையின் ஆறுதல், படம் முழுக்க காமெடி, ஆக்‌ஷன் இல்லாமல் மென்மைக் காதலை சொல்ல முற்பட்டிருப்பது. அதேபோல், விதியை முயன்றால் மாற்ற முடியும் என இறுதியில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலம் விஷுவல்தான். மனோஜ் பரமஹம்சாவின் சினிமோட்டோகிராபி படத்தை வேறு தரத்துக்கு கொண்டு சென்றுள்ளது. தனது கேமரா கண்கள் மூலமாக திரையை கலர்புல்லாக்கி பார்வையாளர்களுக்கு திகட்டாத விருந்து படைத்துள்ளார். சிஜியும், ரவீந்தர் ரெட்டியின் செட்டும், தமனின் பின்னணி இசையும், ஜஸ்டின் பிரபாகரின் இதமான ராகங்களும் ஒரு காஃபி ஷாப்பில் தொடங்கி முடிவடையும் காதல் கதையாக இருந்திருக்க வேண்டிய ராதே ஷ்யாமை பிரமாண்டமாக்கியுள்ளது.

கதையும், காதலும் இன்னும் அழகாகவும் ஆழமாகவும் இருந்திருந்தால், ராதே ஷ்யாம் விஷுவல் ட்ரீட் நிறைந்த காவியக் காதலாக கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால், பல குறைபாடுகளுடன், ஆன்மா இல்லாத காதல் கதையாக மனதில் நிற்கத் தவறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்