காதலிக்க எங்களுக்கு தகுதி இல்லையா? - கவனத்துக்குரிய குறும்படம்

By வா.ரவிக்குமார்

சாதி, மதம், இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இப்படிப் பலவும் காதலுக்கு தடையாக இருப்பதையும், அதை காதலர்கள் எப்படி எதிர்கொண்டு தங்களின் காதலில் வெற்றியடைகிறார்கள் என்பதை மையப்படுத்தி நிறைய திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் பாலினத்தையும் காதலுக்கு தடையாக இந்தச் சமூகம் எப்படி நினைக்கிறது என்பதை 'நேஹா' என்னும் குறும்படம் ஆழமாக அலசுகிறது.

ஆண், பெண் காதலை மையப்படுத்தியே பொதுச் சமூகத்தில் திரைப்படங்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், ஆண் - திருநங்கைக்கு இடையே மலரும் நட்பை, காதலின் வீரியத்தை மிகவும் தீர்க்கமாக பேசுகிறது இந்தக் குறும்படம். நடன ஆசிரியராக நாயகன் நிவாஸ். அவரின் மாணவியாகவும் தன்னார்வ நிறுவனத்தில் பொறுப்பான பணியிலிருக்கும் நாயகி நேஹா. இவர்களுக்கு இடையிலான நட்பு, காதல், கோபம், மனக்கசப்பு, நேசம் எனப் பல வகையான உணர்வுகளையும் இந்தக் குறும்படம் நேர்த்தியாக நம்முன் காட்சிப்படுத்துகிறது.

பிரபல இயக்குநர்கள் எடுக்கும் திரைப்படங்களிலேயே திருநங்கை பாத்திரத்தை ஓர் ஆண் நடிகரையோ பெண் நடிகையையோதான் நடிக்க வைக்கின்றனர். ஆனால் இந்தக் குறும்படத்தில் 'நேஹா' என்னும் திருநங்கையையே மய்ய பாத்திரத்துக்கு தேர்வு செய்திருப்பதிலேயே இயக்குநர் பிரவீன் மற்றும் தயாரிப்பாளர் ரேவதி ஆகியோரின் துணிவு வெளிப்படுகிறது. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என எல்லா விஷயங்களிலும் ஒரு வணிக சினிமாவுக்கான நேர்த்தி பளிச்சிடுகிறது.

குறும்படத்தின் பிரதான பாத்திரமான திருநங்கை நேஹா, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சில குறும்படங்கள், வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் மலையாளப் படம் 'அந்தரம்' ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. நேஹாவிடம் பேசினோம்.

“இந்தச் சமூகத்தின் மீதான திருநங்கையின் அன்பு, நட்பு, ஓர் ஆணைக் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளையே இந்தக் குறும்படம் பேசுகிறது. குறும்படத்தின் மய்யமான பாத்திரத்தில் ஒரு திருநங்கையாகவே நடித்ததையே மாற்றத்துக்கான ஒரு நகர்வாகவே பார்க்கிறேன்.

ஒரு காட்சியில் சமூகத்தைப் பார்த்து நான் கேள்வி கேட்பதாக இருக்கும். அந்தக் காட்சியில் நீங்கள் சமூகத்திடம் என்ன கேள்வியை வைக்க இருக்கிறீர்களோ அதை கேளுங்கள்... உங்கள் மனத்தில் பட்டதை பேசுங்கள் என்று இயக்குநர் பிரவீன் சுதந்திரமாகப் பேசவைத்தார்.

'இந்த உலகத்தில் நாங்களும் எங்கோ ஒரு விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் எங்களுக்கு காதல் என்னும் உணர்வே வரக்கூடாதா? அதற்கு நாங்கள் தகுதி இல்லாதவர்களா? காதலிக்கும் தகுதி திருநங்கைக்கு இருக்கக் கூடாது என்று ஏன் நினைக்கறீங்க?' என்று நான் வாழும் இந்தச் சமூகத்திடம் கோபமும் அழுகையும் கொப்பளிக்க என் மனத்தின் ஆழத்திலிருந்து பேசிவிட்டேன்.

நான் ஏற்றிருக்கும் நேஹா என்னும் கதாபாத்திரத்தின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருநங்கைகளின் ஏக்கத்தையும் வெளிப்படுத்திய குரலாகத்தான் அதை நான் பார்க்கிறேன். இருவருக்கும் இடையேயான காதலை அவர்களின் உருவத்தைக் கொண்டும், இனத்தைக் கொண்டும் மதிப்பிடாதீர்கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பு தாருங்கள் என்பதையே ஒட்டுமொத்தமான திருநர்களின் கோரிக்கையாக சமூகத்திடம் இந்தக் குறும்படம் முன்வைக்கிறது.

திருநங்கைகளும் சமூகத்தில் ஓர் அங்கம்தான். அவர்களுக்கும் குடும்பம், உறவுகள், நட்பு, காதல் எல்லாம் தேவைதான். அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் போதும் அவர்களும் உங்களில் ஒருவர்தான் என்பதை உங்களுக்கு புரியவைப்பார்கள்” என்றார் நேஹா.

திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு வரும் இந்தக் குறும்படத்தின் ட்ரெய்லர் விரைவில் யூடியூபில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE