மீண்டும் ரஜினியுடன் இணையும் வடிவேலு

By செய்திப்பிரிவு

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார்.

‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் ரஜினி - வடிவேலு இணையின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். அதற்குப் பிறகு திரையுலகிலிருந்து வடிவேலு சில காலங்கள் ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் ரஜினி - வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘பீஸ்ட்’ பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, ரஜினி படத்தின் பணிகளை முழுவீச்சில் தொடங்கவுள்ளார் நெல்சன்.

இதில் மிக முக்கியமான காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் வடிவேலு. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பிற்கான தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார் வடிவேலு.

ரஜினிக்கு ஏற்றவகையில் காமெடி கலந்த கமர்ஷியல் கதை ஒன்றினை எழுதியுள்ளார் நெல்சன். இது ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படமாகும். இதில் ரஜினிக்கு நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE