'வலிமை'யை 'மெட்ரோ'வுடன் ஒப்பிடுவது சரியா? - இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கருத்து

By செய்திப்பிரிவு

அஜித்தின் 'வலிமை' படத்தை 'மெட்ரோ' படத்தோடு ஒப்பீடு செய்து வரும் பதிவுகள் தொடர்பாக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'வலிமை'. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பலரும் 'மெட்ரோ' மற்றும் 'வால்டர் வெற்றிவேல்' ஆகிய படங்களின் கலவைதான் என்று தங்களுடைய விமர்சனப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்கும் பலரும் தொலைபேசி வாயிலாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பதிந்த ட்விட்டர் பதிவு:

"வலிமை படத்தின் முதல் காட்சியிலிருந்து, ஒப்பீட்டுப் பார்வையுடன் கூடிய தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இது ஒரு மிகச் சிறிய இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருக்கலாம். அல்லது, தற்செயலாகவும் நடந்திருக்கலாம். வலிமை திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் தமிழ் சினிமா புத்துயிர் பெற்றுள்ளது. ஒரு ரசிகனாக, அஜித் சாரின் அடுத்த படத்துக்காக தவிப்புடன் காத்திருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

> வாசிக்க: முதல் பார்வை | வலிமை - அஜித்தின் ஒன் மேன் ஷோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE