இந்தியில் ரீமேக் ஆகும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' - சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' இந்தி ரீமேக்கில் சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படம் அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இப்படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது. ஆரத்தில் கடவ் இயக்கவுள்ள இப்படத்தில் சான்யா மல்ஹோத்ரா நாயகியாக நடிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விரைவில் தகவல்கள் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிப்பது குறித்து சான்யா மல்ஹோத்ரா கூறும்போது, “ஒரு நடிகையாக இதை விட சிறந்த கதாபாத்திரம் வேறு என்ன வேண்டும். இப்படத்தில் நடிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE