’’இனி வாழ்வில் எல்லாமே என் அண்ணன்தான்’’ - 10 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவை சந்தித்த கங்கை அமரன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனுடன் சேர்ந்திருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். இனி என் வாழ்க்கையில் எல்லாமே என் அண்ணன் எடுக்கும் முடிவுதான். தெய்வ அருளால் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது” என்று இளையராஜாவுடனான சந்திப்புக்கு பிறகு கங்கை அமரன் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இசையமைப்பாளர் இளையாராவுக்கும் அவரது தம்பி கங்கை அமரனுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இதனால் இவர்கள் இருவருமே பேசிக்கொள்ளாமல் இருந்தனர். குடும்ப நிகழ்ச்சிகளில் கூட இருவரும் பங்கேற்றுக் கொள்ளவில்லை. இடைப்பட்ட காலங்களில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி உடனாக காப்புரிமை விவகாரத்தின்போது இளையராஜாவை கங்கை அமரன் கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்ற கங்கை அமரன், அங்கு அவரை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவரது தம்பி பிரேம்ஜி இருவரும் நெகிழ்ச்சியுடன் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன் “நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணனை சந்தித்தேன். என்னுடைய உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். சிறுவயதில் நான் எப்படி இருந்தேன். என்னவெல்லாம் செய்தேன் என்பதைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். என் மனைவி இறந்து போனது பற்றியும் கேட்டார். அவருடைய இசை இப்போது எப்படியிருக்கிறது என்று சொன்னேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனுடன் சேர்ந்திருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். இனி என் வாழ்க்கையில் எல்லாமே என் அண்ணன் எடுக்கும் முடிவுதான். தெய்வ அருளால் இந்த சந்திப்பு நடந்துள்ளது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE