பஹாஸா மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ்ப் படம் ‘ஒத்த செருப்பு’

By செய்திப்பிரிவு

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் இந்தோனேஷியாவின் அதிகாரபூர்வ மொழியான பஹாஸாவில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். மேலும், இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும் வென்றார் பார்த்திபன். சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் இப்படம் வென்றது. இந்தப் படத்தை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதில் இந்தி ரீமேக் உறுதியாக அதில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 'ஒத்த செருப்பு' படம் தற்போது இந்தோனேஷியாவின் அதிகாரபூர்வ மொழியான பஹாஸாவில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை ‘ஒத்த செருப்பு’ பெற்றுள்ளது. பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படுவதால் அம்மொழியை பெருவாரியான மக்கள் பேசும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் மீண்டும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE