படப்பிடிப்பை வீடியோ எடுக்காதீர்கள்: ஷங்கர் - ராம்சரண் படக்குழு கோரிக்கையுடன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஷங்கர் - ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை சட்டவிரோதமான முறையில் புகைப்படங்களோ, வீடியோக்களோ எடுப்பதை தவிர்க்குமாறு படக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதை மீறினால் பைரசி ஒழிப்புக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் உள்ளிட்ட பலர் ராம் சரணுடன் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு திறந்தவெளியில் நடைபெற்று வந்தது. அப்போது சுற்றியிருந்த கூட்டத்தில் இருந்த சிலர் படப்பிடிப்புக் காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இந்தச் சம்பவம் குறித்து தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ், ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஷங்கர் - ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு கதையின் தேவைக்கேற்ப திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை பார்க்கும் அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து, சட்டவிரோதமான முறையில் புகைப்படங்களோ வீடியோக்களோ எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்தகைய ஐடிக்களின் மீது எங்களுடைய பைரசி ஒழிப்புக் குழு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE