'பட்ஜெட் எகிற நான் காரணம் இல்லை' - ‘கோப்ரா’ இயக்குநரின் சர்ச்சை ட்வீட்டும் பதிலும்

By செய்திப்பிரிவு

பட்ஜெட் அதிகரிப்பு தொடர்பாக ‘கோப்ரா’ இயக்குநரின் ட்வீட்டர் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தப் பதிவை சாடிய தயாரிப்பாளர் டி.சிவாவுக்கும் அவர் பதில் தந்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனை லலித் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்குத் திட்டமிட்ட பொருட்செலவை விட பல மடங்களை இயக்குநர் அஜய் ஞானமுத்து தாண்டிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுவிட்டதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில் விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவில் பெரும் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர் லலித் குமாருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை உருவெடுத்துள்ளது.

ஏனென்றால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகிவிட்டாலும், இந்தப் படத்துக்கு இன்னும் செலவு செய்து வருவது லலித்குமார் தான். அவருக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவிக்காதது பெரும் தவறு என்று பலரும் அவரைச் சாடி வருகிறார்கள்.

இது தொடர்பாக முன்னணி தயாரிப்பாளர் டி.சிவா தனது ட்விட்டர் பதிவில் “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.தனது பதிவு சர்ச்சையாகி நிலையில், அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார். தயாரிப்பாளர் சிவாவின் பதிவுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சார், கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE