லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்

By செய்திப்பிரிவு

மறைந்த லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமுல் நிறுவனம் கருப்பு வெள்ளையில் டூடுல் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் நேற்று (பிப்.07) காலை காலமானார். அவருக்கு வயது 92.

அவரது மறைவுக்கு நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பை சிவாஜி பார்க்கில் நேற்று மாலை நடந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள் ஷாரூக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமுல் நிறுவனம் கருப்பு வெள்ளையில் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது அமுல் நிறுவனம் டூடுல் வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கும் அமுல் நிறுவனம் கருப்பு வெள்ளை டூடுல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE